Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | வாலைக் குமரி!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

aim

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

பாலா திரிபுர சுந்தரி – வாலைக் குமரி

பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். ஸ்ரீ வித்யையில் “பாலா” மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு “லகு ஸ்ரீ வித்யா” என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.

அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.

ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், ‘நித்ய யெளவனா‘ என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள “தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா” என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.

சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்

ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தளே = என்பதாக கூறியிருக்கிறார்.

கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு

என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)

இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.

அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான வெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம்.

***

நன்றி!

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in வாலைக் குமரி, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.