Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ சரபேஸ்வரர்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

sarabeswarar

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ சரபேஸ்வரர்!”

சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். தோற்றத்தின் காரணம் தெரிந்து விட்டது. இனி உடலின் ஒவ்வொரு பாகமும் எந்த அமைப்பில் ஏற்பட்டது எனப் பார்ப்போம்.

சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன. காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது. லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது.

எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலில் நாம் பார்த்ததும் தனிச் சன்னதி தான். ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப் படுகிறது.

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம உத்தர பாகத்தில் சரபர் பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.

எவர் ஒருவர் ஸ்ரீ லலிதாசகஸ்ர நாமத்தை பக்தியோடு பாராயணம் செய்கிறார்களோ அவர்களது சத்ருக்களை சரப மூர்த்தி நாசம் செய்து காப்பார்.

இன்றும் நடக்கும் பில்லி-சூன்யம் போன்றவற்றை நீக்குவதற்கும், நாரசிம்ஹ மந்திரத்தால் கட்டப்பட்ட பிரயோகங்களை நீக்குவதற்கும் சரப சாளுவங்கள் என்ற பிரயோகம் தந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மகா உக்கிரமான நாரசிம்ஹத்தை அடக்கியதிலிருந்து சரப மூர்த்தியே மாரக பிரயோகங்களுக்கு மிக உத்தமமானவர் என்று சொல்லப்படுகிறது.

ஹிரண்யகசிபுவைக் கொன்ற நரஸிம்மத்தின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் அந்த உக்கிரம் உலகத்தை பாதிக்காது தவிற்க்க தேவர்கள், முனிவர்கள் சிவனை பிரார்த்திக்க, சிவபிரானும் வீரபத்ரரை அனுப்புகிறார். ஆனால் வீரபத்ரரையும் கட்டி வைத்து ஆட்டுகிறார் நரஸிம்மர். அப்போது வீரபத்திரர் பிரார்த்தனையால் சிவன் விரபத்திர வடிவிலிருந்து உருமாறி சரப உருக்கொண்டு நரஸிம்மத்துடன் 16 நாட்கள் போர் நடக்கிறது. 17ஆம் நாள் சரபர் நரஸிம்மத்தை தன் கரங்களால் தொட, அந்த ஹஸ்த தீக்ஷையானது நரஸிம்மத்தை தெளியவைக்கிறது. தனது செயலுக்காக வருந்திய நரஸிம்மர் 16 ஸ்லோகங்களால் சிவபெருமானை வழிபட்டார். (இந்த 16 ஸ்லோகங்களிலேயே சரபரின் 108 அஷ்ட்டோத்திர நாமாவாக உள்ளது) சரபர் நரஸிம்மத்துடன் இணைந்து இரண்டறக்கலந்தபின் தேவர்களையும், முனிவர்களையும் பார்த்து ‘நீரும், நீரும், பாலும், பாலும் கலந்தால் எப்படி வேறுபடுத்த முடியாதோ, அது போல விஷ்ணுவும் சிவனும் ஒருவரே. எங்களை வேறுபடுத்திப் பார்க்கத் தேவையில்லை. என்று சொல்கிறார்.

சரபதத்துவம் என்னவென்றால், உபாசகன் இந்திரியங்களை அடக்கி அதன் வழியாக கார்யசித்தி அடையத்துவங்கும் காலத்தில் உபாசகனுக்கு கர்வமும் “தான்” என்ற மமதையும் இருக்கும். (இந்திரிய ஒடுக்கமே ஹிரண்ய வதம்) என்னதான் இந்திரியக் கட்டுப்பாடு இருந்தாலும் மனது அடங்காததால் அளவிற்கு மீறிய கோபம். இந்த அகங்காரத்தை ஒடுக்கிய சக்தியே சரபர்.

மான், மழு, சர்பம், தீ போன்றவற்றை ஆயுதமாக கொண்டிருக்கிறார் சரபர். இதில் அகந்தையை ஒழிக்கக் கூடியது மழு. மான் எப்போதும் சஞ்சலப் பார்வையுடையது, அதனை அடக்கி மனதை ஒருமுகப் படுத்தல் வேண்டும். குண்டலினிக்கு சாட்சியாக பாம்பும், தீயானது ஞானாக்னிக்கு சாட்சியாகவும் சொல்லப்படுகிறது. சரப மூர்த்திக்கு ஆதாரம் பல இடங்களில், குறிப்பாக ரிக் வேதம், தைத்ரீகம், ஸ்கந்த புராணம், காளிகா புராணம், பிரும்மாண்ட புராணம், சிவ பராக்ரமம் போன்றவை.

நல்லது செய்வதாகட்டும், அசுர சக்திகளை நாசம் செய்வதாகட்டும் இறைவனுக்கு உதவியாக பல சக்திகள் வந்துள்ளன. இங்கு சரபருக்கு இரு விதமான சக்திகள் உதவியுள்ளனர். ஒன்று மிக உக்ரமான பத்ரகாளி எனப்படும் பிரத்யங்கரா, இன்னொன்று சூலினி எனப்படும் துர்கா. புற சம்பந்தமான பாவங்களையெல்லாம் அழிப்பவள் துர்க்கா. அக சம்பந்தமான பந்தத்திலிருந்து நீக்கி முக்தியளிப்பவள் பிரத்தியங்கரா. சுருக்கமாகச் சொன்னால் இம்மைக்கு சூலினியும், மறுமைக்கு பிரத்யங்கராவும் அவசியம். இந்த இரு சக்திகளும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்யங்கரா தேவியின் மந்திரங்களை கண்டறிந்து சொன்னவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்பவர்கள். இவளது மந்திரத்தை சாதகம் செய்பவர்களை துவேஷிக்கக் கூடாது. இவள் இறைவனது கோபத்திலிருந்து உதித்ததால்தான் “குரோத சம்பவாய” என்கிற நாமம் அன்னைக்கு ஏற்பட்டது.

சரபர் ஸிம்ஹ ரூபமுள்ளவரை அடக்கியதால் “ஸிம்ஹக்னர்” என்றும் சாலுக்கியர் வழிபட்டதால் “சாலுவேசர்” என்றும் அழைக்கப்படுகிறார். சாலுக்கியரில் இரு பிரிவுகளுண்டு. மேலை சாளுக்கியர், கீழை சாளுக்கியர் என்பதே அவை. இதில் கீழை சாளுக்கியர் சரபேஸ்வரரை குலதெய்வமாகவும் மேலை சாளூக்கியர்கள் நரஸிம்மத்தையும் வழிபட்டு வந்தனர். இவர்களுக்கும் சோழர்களுக்கும் இருந்த உறவின் முறையால் தமிழகத்தில் சரபர் வழிபாடு நிலைபெற்றிருக்கலாம்.

திரிபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட ஆலயம் தவிர மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற சில இடங்களிலும் சரப வழிபாடு உண்டு. சரப வழிபாட்டிற்காக பல ஸ்லோகங்கள், நாமாவளிகள் உண்டு, அவை சரப அஷ்டகம், கவசம், சஹஸ்ர நாமம், அஷ்ட்டோத்திரம் போன்றவையாகும்.

படித்ததில் பிடித்தது!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, WhatsApp:- +91 96774 50429

This entry was posted in ஸ்ரீ சரபேஸ்வரர்!, Uncategorized and tagged , , . Bookmark the permalink.