Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

mathangi

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு!”

இசை, இலக்கியம், நடனம் மற்றும் சகலகலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி நிர்வாக சாமர்த்யமும் நல்கும் ஞான வடிவினள் அன்னை ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி. அந்த அன்னையை வணங்கி அவளை வழிபடும் முறைகளை விளக்குகிறேன்.

மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம், ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம், பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும். அதன் பிறகே ஸ்ரீ வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும்.

ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை இரண்டும் சித்தி செய்தவர்களுக்கு எந்த மந்திரமும் எளிதில் சித்திக்கும். ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை ஸ்ரீ வித்யா உபாசனைக்கான உள்ள பண்பாடு, சித்த சுத்தி, சத்வ குணம், இவற்றை நல்கும். அது ஸ்ரீ ராஜமாதங்கி வழிபாட்டில் முழுமை பெறும்.

ஸ்ரீ மதங்க முனிவர் ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் தரிசனம் பெற்று அவளையே தன் மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றார். அதன் பயனாக ஸ்ரீ ராஜமாதங்கி மதங்க முனிவரின் மகளாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினாள். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் கரத்தில் உள்ள கரும்பு வில்லில் இருந்து உண்டானவள். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி எனும் பராசக்தியின் மந்திரியாய் விளங்குகிறாள். அவளின் ராஜ்ய பாரம் முழுதும் கவனிப்பவள். சங்கீதத்திற்கு இவளே அதிபதி (அதிஷ்டான தேவதை).

ஸ்ரீ ராஜமாதங்கி நம் உடலில் புத்தி தத்துவமாகவும், ஸ்ரீ வாராஹி நம் உடலில் சைதன்ய தத்துவமாகவும் விளங்குகிறார்கள். மனம் செயல்பட புத்தியும், உடல் செயல்பட சைதன்யமும் வேண்டும். ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு மிக நெருக்க மானவர்கள் இவர்கள் இருவரே இதற்கு மேல் உயர்ந்த ஸ்தானம் வகிப்பது பராசக்தி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே.

இவளை அனாஹத சக்கரம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும்.

இவளது அங்க தேவதை லகு ஷ்யாமளா, உபாங்க தேவதை வாக்வாதினி, பிரத்யங்க தேவதை நகுலீ. இவர்கள் சாதகனுக்கு நல்ல வாக்குவன்மை, கலைகளில் தேர்ச்சி, சங்கீத ஞானம், சகலகலா பாண்டித்யம் அருள்வார்கள்.

இவள் உபாசனையால், அருளால், புகழ் பெற்றோர் ஸ்ரீ மகாகவி காளிதாசர், ஸ்ரீ பாஸ்கரராயர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோரும் ஆவர்.

மதுரை மீனாக்ஷி ஸ்ரீ ராஜமாதங்கி அம்சம். திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ மகா வாராஹி அம்சம். எனவே இவள் மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிப்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வைத்து ஜெபத்தைத் தொடங்கலாம்.

ஸ்ரீ ராஜமாதங்கியைத் தினமும் வழிபடலாம். அதிலும், அஷ்டமி, பௌர்ணமி, சித்திரை மாதம் வளர்பிறை, மாசி மாதம் வளர்பிறைகளிலும் வழிபட, பூஜை செய்ய இவள் பேரருள் பெறலாம்.

அரசாங்க காரிய வெற்றி, சர்வ ஜன வசீகரம், பெரிய பதவிகள் கிடைத்தல், அவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்தல் போன்ற பலன்களுக்கு ஸ்ரீ ராஜமாதங்கியையும், சங்கீதம்,கலைகளில் தேர்ச்சி இவைகளுக்கு ஸ்ரீ லகு ஷ்யாமாவையும் வழிபடலாம்.

ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்:

ஓம் | ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் | ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி | சர்வஜன மனோஹரி | சர்வ முக ரஞ்சனி | க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் | சர்வ ராஜ வசங்கரி | சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி | சர்வ துஷ்டமிருக வசங்கரி | சர்வ சத்வ வசங்கரி | சர்வ லோக வசங்கரி த்ரைலோக்யம் மே | வசமானய நமோ நமஹா | சௌம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்||

அல்லது

ஓம் | ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் | ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி | சர்வஜன மனோஹரி | சர்வ முக ரஞ்சனி | க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் | சர்வ ராஜ வசங்கரி | சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி | சர்வ துஷ்டமிருக வசங்கரி | சர்வசத்வ வசங்கரி | சர்வ லோக வசங்கரி த்ரைலோக்யம் மே | வசமானய நமோ நமஹா ||

என்றும் ஜெபிக்கலாம். ஹோமம் செய்தால் அப்பொழுது நமோ நமஹ: என்பதற்குப் பதிலாக ஸ்வாஹ: என மாற்றி ஜெபிக்கவும்.

ஸ்ரீ லகு ஷ்யாமா மந்திரம்:

ஐம் நமஹ உச்சிஷ்ட சாண்டாளி மாதங்கி சர்வ வசங்கரி நமோ நமஹ ||

அல்லது

ஐம் க்லீம் நமஹ உச்சிஷ்ட சாண்டாளி மாதங்கி சர்வ வசங்கரி நமோ நமஹ||

மூலமந்திரம் ஜெபிப்பவர்களும், ஜெபிக்க இயலாதவர்களும் கீழே காணும் இவளது 16 நாமங்களை தினமும் குளித்து முடித்ததும் கிழக்கு நோக்கி நின்றோ, அமர்ந்தோ ஒரு முறையேனும் சொல்பவர்களுக்கும் இவள் அருள் கிட்டும். முக்கியமான அலுவல் நிமித்தமான பேச்சு வார்த்தை, மேடைப் பிரசங்கம், பாடங்கள் படிக்கும் முன் இந்த நாமங்களை ஜெபிப்பது நன்மை தரும்.

ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-  1.சங்கீதயோகினி, 2.ஷ்யாமா, 3.ஷ்யாமளா, 4.மந்திரநாயிகா, 5.மந்திரிணி,6. சசிவேசானி, 7.ப்ரதானேசி, 8.சுகப்ரியா, 9.வீணாவதி, 10.வைணிகீ, 11.முத்ரிணி, 12.ப்ரியகப்ரியா, 13.நீபப்ரியா, 14.கதம்பேசி, 15.கதம்பவனவாசினி, 16.சதாமதா.

***

படித்ததில் பிடித்தது!

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in சாக்தம், ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு!, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.