Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | தேவி பகளாமுகி | DEVI BHAGALAMUKHI

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

bagalamukhi

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

தேவி பகளாமுகி

DEVI BHAGALAMUKHI

இன்று முதல் பகளாமுகி நவராத்திரி ஆரம்பம். இன்று இத்தேவியின் சிறப்பை காண்போமா! லலிதா பரமேஸ்வரியின் சேனாதிபதியாக வழிபடப்படுபவள், பகளாமுகி தேவி. இவளுக்கு தண்ட நாதா என்றும் தண்டினி என்றும் பெயர்கள் உண்டு. தஸமஹா வித்யாவில் எட்டாவது அம்சமாய்த் திகழ்கிறாள் இவள்.

கிருதயுகத்தின் தொடக்கத்தில் ஒரு மகாப் பிரளயம் ஏற்பட்டது. நான்கு புறங்களிலும் கடல் பொங்கி சூறாவளிக் காற்றுடன் பெருமழை பெய்தது. அதனால் கடலில் யோக நித்திரை கொண்டிருந்த திருமால் பரமேஸ்வரனைத் துதிக்க, பரமேஸ்வரன் பகளாமுகியின் மூல மந்திரத்தை நாரணனுக்கு நல்கினார்.

நாரணன் நாவில் பகளாமுகி மந்திரம் உருவேறிற்று. அண்ணனின் அன்பான ஜபத்தால் அகமகிழ்ந்த அன்புத் தங்கை சௌராஷ்டிர பிரதேசத்தில் உள்ள மஞ்சள் நீர் நிரம்பிய தீர்த்தத்தில் நீராடி ‘ப்ரஹ்மாஸ்த்திர ரூபிணி’யாய் ஆவிர்பவித்தாள். இவள் மூவுலகையும் ஸ்தம்பிக்க வைக்கும் சக்தியுடையவளாய் இருந்ததால் சூறாவளியும் கடல் கொந்தளிப்பும் நின்றன. அனைத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் சக்தி தேவிக்கு இருந்ததால் தேவர்கள் இவளை ‘ஸ்தம்பினி’ எனப் போற்றினார்கள். நாரணனுக்கு பகளாமுகி மந்திரத்தை உபதேசித்த தமோ குண வடிவினனான மகாதேவனே ஆராதிக்கும் பகளாமுகி தேவி மிகச் சிறந்த சக்தி படைத்த தேவியாவாள்.

இவள் இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் ஸ்தம்பனம் (நிறுத்தச்) செய்பவள். வல்கா என்றால் லகான் என்று பெயர். வாக்குக்கு லகான் போட்டு நிறுத்தும் சக்தி உடையவள் வல்காமுகி. வல்காமுகியே ‘பகளாமுகி’யானாள்.

அம்ருதக் கடலின் மத்தியில் நவமணிகளால் ஆன மாளிகையில், ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்தவள். தங்கத்தைப் பழிக்கும் திருமேனி கொண்டவள். வைர, வைடூர்யங்களாலான அணிகலன்களை அணிந்து ஒளி வீசுபவள். அடியார்க்கு சாந்தமும் அல்லார்க்கு பயமும் காட்டும் முகத்தினள். வானவில் போன்ற புருவத்தைக் கொண்டவள். ஒரு திருக்கரம் எதிரியின் நாக்கைப் பிடித்துக் கொண்டும் மற்றொரு திருக்கரம் அபயம் தரித்தும் மற்ற இரு திருக்கரங்களில் முத்கரம், வஜ்ராயுதம் ஏந்தியும் அருட்கோலம் காட்டுபவள். இத்தேவியின் தேஜோமயமான திரு முக மண்டலத்தை  ‘தவளானன ஸுந்தரி’ என்றும் சந்த்ர பிம்பம் போன்று இருப்பதை ‘இந்து பிம்பானனா’ என்றும் மந்திர சாஸ்திரங்கள்  பேசுகின்றன.

வேதங்கள் ‘ஹிரண்ய வர்ணாம்’ என இவளைத் துதிக்கின்றன. தங்க நிறம் முற்றி தன் பொலிவைக் குறைத்தால் மஞ்சள் நிறமாக மாறுகிறது. உலகியலிலும் மீதி வர்ணங்களின் பிரகாசம் குறைய மஞ்சள் வர்ணம் சேர்வதை நாம் கண்டுள்ளோம். அதன்படியே பிறரின் ப்ரபாவம் குறைய ‘பீதாம்பரி’ என அழைக்கப்படும் பகளாமுகியின் தியானம் தந்த்ரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. சத்ருக்களை வெல்வது இவளின் உபாசனையின் முக்கிய பலன்.

இந்த அம்பிகையின் பூஜா சாதனங்கள் அனைத்தும் மஞ்சள் நிறமேயாகும். பக்தன் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிற ஆசனத்தில் அமர்ந்து சாமந்தி, செண்பகம் போன்ற மஞ்சள் நிறப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மஞ்சளால் ஆன மாலை கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

ஆதியில் கயிலையில் பூத கணங்களோடும் முனிவர்களோடும் நந்தியம் பெருமானுடனும் பரமன் அகிலாண்ட கோடி ப்ரமாண்ட நாயகியாம் அன்னை உமையுடன் கொலு வீற்றிருந்தபோது, முருகன் அசுரர்களை வெல்லும் விதி முறைகள் பற்றி பரமேஸ்வரனிடம் கேட்டார். பரமன், ‘ப்ரஹ்மாஸ்த்திரம்’ என வழங்கப்படும் பகளாமுகி மந்திரத்தை முருகனுக்கு அருளினார். இதிலிருந்தே இத்தேவியின் மகிமை விளங்கும். இந்த தேவியின் உபாசனையை ‘இந்த்ரயோனீ வித்யை’ என்றும் தேவி உபாசகர்கள்  போற்றுவர். ‘ஹ்ர்லீம்’ பீஜத்தில் உறைபவள் இந்த அம்பிகை.

ஐம்புலன்களையும் ஆமைபோல் உள்ளே இழுத்துக் கட்டுப்படுத்தும் சக்தி, இவள் ஆராதனையால் ஏற்படும். சித்து வேலைகள் புரிவோரால் இந்த தேவியின் உபாசகரை ஏமாற்ற முடியாது. வாக்குவாதத்திலும் பெரிய மாநாடு, கூட்டங்கள் போன்றவற்றிலும் இவளைத் தியானிக்க, வாக்குவன்மை மேலோங்கும். வழக்குகளில் வெற்றி பெற இவள் அருள் கட்டாயமாகத் தேவை. வாதாடும் திறமையை அருள்பவள். எலுமிச்சம்பழ சாதத்தை நிவேதனம் செய்தால் சடுதியில் அருள்பவள்.

மனநிலை பாதிக்கப்பட்டோருக்காக யாரேனும் பகளாமுகிக்கு நேர்ந்துகொண்டு பூஜைகள் செய்தால் தேவி உடனே மனநோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாள்.

இந்த தேவியின் ஆராதனை, உபாசிப்பவர்தம் குலத்தைக் காக்கும். புகழை மங்காமல் இருக்கச் செய்யும். எதிரிகள் தூள் தூளாவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் தொலையும். நீருக்குள்ளும், நெருப்புக்குள்ளும் எந்தவிதத் தீங்கு நேராமல் இருக்கும் ஸித்தியைத் தரும்.

பகளாமுகி நம் சரீரத்தில் சங்கினி எனும் நாடியில் உறைவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

நம் காமக்ரோதாதி உள் சத்ருக்களை வெல்ல வைத்து ஆத்மஞானம், குபேரன் போன்ற செல்வம், நல்ல பதவி போன்றவற்றை அருளும் தேவி பகளாமுகிதேவி.

மூலம்: ஓம் ஹ்ரீம் பகளாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் ஸ்தம்பய, ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம் நாசய நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ ||

ப்ரயோகம் 1.: ஓம் ஐம் ஹ்லீம் | வியாபார விருத்திம் குரு | ஹ்லீம் ஐம் ஓம் ||

ப்ரயோகம் 2.: ஓம் ஐம் ஹ்ல்ரீம் | சகல சம்பத்விருத்திம் குரு | ஹ்ல்ரீம் ஐம் ஓம் ||

விதி: ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு முகமாக  விளக்கேற்றி மேற்கு நோக்கி அமர்ந்து விளக்கின் முன்னால் மஞ்சள் பட்டுத்துணி வைத்து விளக்கிற்கு இந்த மந்திரத்தைச் சொல்லி 18 தடவை மஞ்சள் அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும். பின்னர் மஞ்சள் பட்டுத்துணியில் மஞ்சளால் (தண்ணீரில் குழைத்த மஞ்சள்) கீழ் நோக்கிய முக்கோணம் ஒன்று வரைந்து அதனுள் ஹ்லீம் என்று எழுதி முக்கோணத்தின் மூலைகளிலும் நடுவிலும்  குங்குமம் வைத்து அதன் மேல் ஒரு தேங்காயும் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 எண்ணிக்கை ஜெபித்து மஞ்சள்  துணியில் தேங்காயை முடிந்து கடை அல்லது தொழில் ஸ்தாபனங்களில் முதலாளி அமரும் இடத்தில் உள்ள விளக்கின் அருகில் வைக்க எதிரிகளின் தொல்லை, திருஷ்டி இவை நீங்குவதுடன் தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.

வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் செம்பில் தண்ணீர் வைத்து அதில் சிறிது மஞ்சள் பொடி போட்டு இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீடு, கடை, அலுவலகங்களில் தெளிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும்.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in தேவி பகளாமுகி, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, DEVI BHAGALAMUKHI, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.