Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அம்பிகையும், காஞ்சியும்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:||

persu

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அம்பிகையும், காஞ்சியும்!”

kanchi-kamatchi

அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. ‘காம’ என்றால் அன்பு, கருணை. ‘அட்ச’ என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.

அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

புண்ணிய பூமியான பாரத தேசத்தில் (இந்தியாவில்) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான்.

அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல் மிக்க வரலாறாக விரிகின்றது.

முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.

பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், ”அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது” என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, ‘காம கோட்டம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.

அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.

பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர்.

அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் (பாலாம்பிகை?) உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்

அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள். அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள்.

அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறிப் போர் புரிந்தது.

இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையொன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது. அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்குச் சிவபெருமானை அழைத்தார்.

சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன. இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.

அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுறனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக் கொண்டிருந்தார்கள்.

மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள். ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள்.

அந்த நன்னாள், ஸ்வயம்பு மன்வந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும். எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள்.

அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.

அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.

தற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது. அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.

(பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில் தான் அன்னை காட்சியளிப்பாள்.) அந்த மூவகை வடிவங்களாவன:

காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்)
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)

ஸ்ரீ காமாட்சி அன்னைக்கு ஸ்ரீ மஹாதேவி, ஸ்ரீ திரிபுரசுந்தரி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ காமேஸ்வரி, ஸ்ரீ லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை.

அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.

ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in அம்பிகையும் காஞ்சியும்!, ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, Uncategorized and tagged , , . Bookmark the permalink.