Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

pers

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை!”

‘க்ஷயம்’ என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள்.

சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் யுகாதிதான். ‘மாலோடு’ ‘திரு’ சேர்ந்து, மஹாவிஷ்ணு ‘திருமால்’ ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள்.

இல்லத்தில் செய்யும் பூஜை தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!

மகத்துவம் மிகுந்த அக்ஷ்ய த்ரிதியை நாளில் எந்த ஒரு செயலைத் துவங்கினாலும் பொன்னும்,வெள்ளியும், பொருளும் வாங்கினாலும் அவை மேன்மேலும் வளர்ந்து வளமை தரும் என்பது தொன்று தொட்டு நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை. இந்த நம்பிக்கை வளர காரணமாயிருப்பது பல புராணங்களில் நிகழ்ந்துள்ள சம்பவங்களும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும்தான். அவற்றில் சில……….

 1. திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வர்ய லக்ஷ்மி மற்றும் தான்ய லக்ஷ்மி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.

 2. இந்த புண்ணிய நாளில் தான் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.

 3. மஹோதயம் எனும் நகரில், வணிகன் ஒருவன் அட்சய த்ரிதியை தினத்தின் மகிமையைக் கேள்வியுற்று, அந்நாளில் கங்கையில் நீராடிவிட்டு, பித்ருத் தர்ப்பணம் செய்வதுடன், கோதானம், சுவர்ணதானம், பூமிதானம் போன்றவற்றைச் செய்து, மறுபிறவியில் ‘குசாவதி’ நாட்டின் அரசனானதும் த்ரிதியை தினத்தின் மகத்துவத்தை உணர்த்தும் ஒருகதைதான். எனவே இந்த தினத்தில் விசிறி, குடை, சுவர்ணம் ஆகியவற்றை தானம் செய்வது அழியாப்பலனைத்தரும் என்பது விசேஷம்.

 4. மஹாபாரதக்கதையில், கெளரவர் சபையிலே கெளரவம் பறிபோய் அவமானம் நேர்ந்துவிட்ட அச்சத்தில், அவலக்குரலில் அபயம்! அபயம்! என்று அலறினாள் திரெளபதி இருந்த இடத்திலிருந்தே ‘அக்ஷ்யம்’ என்றார் கண்ணன். குறையாமல் வளர்ந்தது திரெளபதியின் சேலை. காக்கப்பட்டது பாஞ்சாலின் கற்பு, இது நிகழ்ந்ததும் ஒரு த்ரிதியை தினத்தில்தான்.

 5. பாற்கடல் கடையப்பட்டபோது, அமுதத்தோடு அவதரித்த மலைமகள், ‘அகலுமில்லேன்’ என்று மாலவன் மார்பில் நிலையான இடம் பிடித்தது த்ரிதியை திதி நாளில்தான்.

 6. மஹாலக்ஷ்மியின் பார்வை பட்டதால் பிறை நிலவாகப் பிறந்த சந்திரன், அட்சயமாகப் பெருகி வளர்ந்த முழுமதியாகப் பிரகாசித்தவன் ஒருசமயம், மதிகெட்ட செயலால், சாபம் பெற்று உடல் க்ஷயரோகத்தால் தேய்ந்தபோது, அபயம் என்று இறைவனைத் தஞ்சமடைந்து, சாப விமோசனமாக அக்ஷயவரம் பெற்றதும் இந்த த்ரிதியை தினத்தன்றுதான்.

 7.  எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமான் பிட்சாடனர் ஆக அலைந்தபோது அவருக்கு பிச்சையிட, அன்னையானவள் அன்னபூரணியாக வடிவெடுத்து வந்ததும் இந்த அக்ஷய திருதியை நாளில் என்று சிவபுராணம் சொல்கிறது. பின் அந்த தங்கத்திலான அட்சய பாத்திரத்திலிருந்து ஸ்வர்ண கரண்டியால் உணவை கொடுத்து, அகிலாண்டநாயகி உலகுக்கு அன்னம் வழங்கத் தொடங்கியதும் இத்திருநாளில்தான்.

 8. சகோதரன் ராவணனால் விரட்டப்பட்டு, வறுமையில் வாடிய குபேரன், ஈடற்ற தவத்தால், ஈஸ்வரனின் ஆக்ஞைப்படி, திருமகளை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதி என்ற ஐஸ்வர்ய கலசங்களைப் பெற்ற நாளும் அட்சய த்ரிதியை நாளன்றுதான்.

 9. வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரியபகவான், ‘அன்னவளம் குன்றாத’ அட்சயப்பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.

 10. ஏழ்மை என்பதற்கே எடுத்துக்காட்டாக இருந்த குசேலர், கண்ணன் கூறிய ‘அக்ஷ்யம்’ என்ற சொல்லால் குபேரவாழ்வு பெற்றதும் த்ரிதியை தினம் ஒன்றில்தான்.

 11. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அக்ஷய’ என்று நிறைவடையும். ‘அக்ஷய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.

 12. இந்த கலியுகத்தில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிட்சையிட்ட ஏழைப் பெண்மணியின் துயர் துடைக்க கனகதாரா ஸ்தோத்ரம் படைத்து மகாலட்சுமியின் அருளினால் அந்தப் பெண்மணியின் இல்லத்தில் செல்வத்தை நிறையச் செய்தது இந்த அக்ஷய திருதியை நாளில். கனகம் என்றால் தங்கம் என்று பொருள். தாரை என்றால் விடாமல் பொழிவது. இவ்வாறு தங்கத்தை விடாமல் பொழியச் செய்யும் சக்தி படைத்த கனகதாரா ஸ்தோத்ரத்தை சங்கரர் இயற்றியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்பதால் இந்த நாளானது தங்கத்திற்கு முக்கியத்துவம் தரும் நாளாக அமைந்துவிட்டது.

 13. கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.

 14. ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

 15. சாளக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத் திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

 16. வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

 17. தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்

 18. தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.

 19. பிளாட்டினத்திற்கு தெய்வீக சக்திகள் எதுவும் கூறப்படுவது இல்லை, எனவே இதனை வாங்குவதால் பலம் இருப்பதாகக் கூறப்படுவது இல்லை.

  இந்நாள் வெள்ளி உலோகத்துக்கு உரியது எனலாம். இப்போது மிக பலன் வாய்ந்த, நம் கஷ்டங்கள் உடனடியாக விலக, கிரக தோஷங்கள் விலக இந்நாளில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்ப்போம்.  பூச்சி, பறவைகள், பசு, எறும்பு மற்றும் நாய்களுக்கு உணவிடுவதே அந்த பரிகாரமாகும். மிக சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை ஒரு நிகழ்வில் காஞ்சி மஹா பெரியவரே சூட்சுமுமாக விளக்கியுள்ளார். இந்நாளில் எறும்புகள் கூடியுள்ள புற்றுகளில் சிறு சர்க்கரை அல்லது அரிசி பொடி சேர்ப்பது, நாய்களுக்கு தயிர் சாதம் அல்லது சப்பாத்தி, பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் பழங்கள், பறவைகளுக்கு அரிசி அல்லது தினை மற்றும் இவைகளுக்கு இந்த கோடை காலம் முழுதும் நீர் அருந்த நம் வீட்டில் ஏதேனும் வசதி செய்து கொடுத்தால் இந்த புண்ணியம் நம் வாழ் நாள் பின் தொடர்வதோடு நம் கஷ்டங்களும் கண் கூடாக விலகுவதை காணலாம். மேலும் முடிந்தவர்கள் வெள்ளி பாத்திரத்தில் வயதானவர்கள் குடிக்க நீர் மோர் வழங்கலாம். வெள்ளி பாத்திரத்தில் தயிர் சாதம் வைத்து அதை விநியோகம் செய்வதும் மிக சிறந்த பரிகாரம். இதையெல்லாம் விட்டு விட்டு தங்க நகை வாங்க அலை மோதுவது எந்த விதத்திலும் பயன் தராது!  அனைவரும் மேற்கண்ட முறைகளை பின்பற்றி வாழ் நாள் முழுதும் இன்புற்று இருக்கவே இன்னாளில் இறைவனை வேண்டுகிறேன்!

  ***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

***

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

lakshmi

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

 

”ஸ்ரீ தேவி பத்மாத்மிகாவின் த்ரியக்ஷரி வித்யை”

இனிய காலை வணக்கம், சீர்மிகு வாழ்வு சிறப்புடனும் செழிப்புடனும் அமையவே!

|| ஓம் ஐம் க்லீம் ஹ்சௌ: நம: ||

இது ஸ்ரீ லக்ஷ்மியின் உருவேயான ஸ்ரீ தேவி பத்மாத்மிகாவின் த்ரியக்ஷரி வித்யையாகும்! இதற்கும் பாலாவின் த்ரியக்ஷரிக்கு உள்ள ஒற்றுமையை காண்க! இந்த மந்திரத்தை சித்தி செய்துகொண்டவர் பாலாவைப் போலவே வேரு மந்திரத்தை எக்காலத்திலும் நாடார்!

படித்தவர் பகிரவும், முடிந்தவர் முயற்சிக்கவும்!

This entry was posted in அக்ஷய பலன் தரும் அக்ஷய த்ரிதியை!, Uncategorized and tagged , , . Bookmark the permalink.