“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 12 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 3

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

bala

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்” – Part 12

***ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 3***

*** வாலை வணக்கம்***

முப்பீஜமந்த்ரமான த்ர்யக்ஷரிக்கும், ஸ்ரீ பாலாதேவிக்குமுள்ள
அபேதம் கூறப்படுகின்றது:-

1.ஐந்தரியெ ழிற்குமரி முந்துரவி செஞ்சுடர்
      
உந்தனித யத்திலுயர
  
இந்திரவில் சிந்துமொளி இதகிலீங் காரமென
      
இருபுருவ நடுவில்வளர
  
சந்திரனின் பாலொளிச் சௌமியத் தண்சுடர்
      
சுந்தரிநின் சிரசில்விரிய
  
வந்தருள்க முப்பீஜ மந்திரம தானதிரு
      
வாலைதிரி புரையழகியே!

ஐந்தரி – அழகுற்றவள், முந்துரவி – உதயசூரியன்; இந்திரவில் – வானவில்; சௌமிய – சாந்தமான.
ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியின் மந்த்ர மஹிமை இம்முதற்பாவில் விளக்கப்பட்டுள்ளது. உதய சூரியனின் சிவந்த காந்தியோடு அநாஹத பத்மம் எனும் ஹ்ருதயத்தில் “ ஐம் ” என்ற ஒலி வடிவத்தோடும், நெற்றி நடுவில் இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஜ்ஞா சக்ரத்தில் பல வண்ணங்களோடு தோன்றும் வான வில்லின் ஒளியோடு “ க்லீம் ” என்ற ஒலி வடிவத்தோடும், த்வாதசாந்த பத்மம் என்கின்ற சிரஸின் உச்சியில் சந்திரிகையின் வெண்மையான தேஜஸை பரவச்செய்யும் “ ஸௌ” என்ற ஒலி வடிவத்தோடும் கூடிய த்ர்யக்ஷரி மந்த்ரமாகும் மூன்று பீஜங்களின் வடிவாக விளங்குகின்ற ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரி தேவியே நீ அருள் புரிவாயாக.

[கோடி சூரியனின் அருணப் பிரகாசத்தோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையில் வாக்பவ பீஜமாகின்ற முதல் பீஜமும், அநாஹதம் முதல் ஆஜ்ஞை வரையில் வானவில்லையொத்த பல வர்ணங்களோடு கூடிய காமராஜ பீஜமாகின்ற இரண்டாவது பீஜமும், ஆஜ்ஞையிலிருந்து ஸஹஸ்ராரம் வரையில் பூர்ணசந்திரனின் வெண்காந்தியோடு கூடிய சக்தி பீஜமாகின்ற மூன்றாவது பீஜமும் வ்யாபித்து விளங்குகிறது என்பதும் இப்பாவின் கருத்தாகும்.]

****

அஷ்டகோண யந்த்ரத்தின் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாதேவியிடம் வரமருள விண்ணப்பம்:-

2.அட்டவிதழ்முளரியுள் எண்கோணவலயமிடை
      
ஆதிபரைகோணமொன்றின்
  
நட்டநடுவேஞான நிட்டையொடுவளர்யோக
      
நங்கைசிவ மங்கைபரையே
  
மட்டவிழ்க்கந்தமிகு மரவிந்தமலரிலமர்
      
மங்கலை சிவானந்தியே
  
இட்டமுடன்வரமருள் சிட்டருக்கெளியதிரு
      
வாலைதிரி புரையழகியே!

அட்டவிதழ் முளரி – எட்டு இதழ்கள் உள்ள தாமரை; எண்கோண வலயம் – அஷ்டகோண சக்கரம்; ஆதிபரைகோணம் – ஒற்றைக் கோணம் கீழ் நோக்கியுள்ள சக்தி முக்கோணம்; யோக நங்கை – யோகினி; மட்டு – தேன்; அவிழ் – சிந்துகின்ற; கந்தமிகு – மணமுற்ற, இட்டமுடன் – விருப்பமுடன், சிட்டருக்கெளிய – அடியார்களால் எளிதில் அடையப்பெறும்.

இப்பாவில் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியின் யந்த்ரம் கூறப்பட்டிருப்பதோடு, அடியார்களால் எளிதில் அடையப்பெறும் பாலாதேவி நாட்டமோடு அருள் பாலிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்டிருக்கின்றது.

****

சோணகமலாசனையான ஸ்ரீ பாலாதேவியின் வர்ணனை:-

 3.மேனியிற்செவ்வாடை வேணியிலிளந்திங்கள்
      
பானுவின்செக்கர்வண்ணம்
  
மோனநகையுலவுசம் மோகனமுகத்திலகு
      
ஞானநயனங்கள்மூன்றும்
  
பாணிநான்கில்அக்க மாலைஏடும்அபய
      
தானகுறிகளுமணிந்த
  
சோணகமலாசனையை பேணினேன்மனதில்திரு
      
வாலைதிரிபுரையழகியே!

பாணி – கரம்; அக்கமாலை – ஸ்படிகாக்ஷமாலை; குறி – முத்திரை; சோணகமலாசனை – செந்தாமரையில் வீற்றிருப்பவள்.

சிவந்த ஆடையை அணிந்து, பிறைச்சந்திரனை முடியிற்சூடி, உதிக்கின்ற சூரியனின் அருணகிரணத்தை வீசுகின்ற உடலழகோடு மூன்றுகண்களும், ஸ்படிகமாலை, புஸ்தகம், அபய, வர முத்திரைகளைத்தரித்த நான்கு கைகளோடும்கூடி செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாத்ரிபுரசுந்தரியை த்யானிக்கின்றேன்.

****

ஆதி அந்தமிலா ஜ்யோதிர்மயியும், அருணப்ரபை வீசுகின்ற
சிவயோகினியுமான ஸ்ரீ பாலாம்பிகை:-

4.நூதனைநலந்தருச னாதனிபுரந்தரைநி
      
ராமயிபுராரிமெய்யின்
  
பாதிபரசாம்பவிப வானிசிவயோகினிவி
      
நோதினிநிதாந்தகலிகை
  
சோதிமயிசெங்கதிர்க் கோதைபரதேவியாம்
      
ஆதியந்தமிலிவிமலை
  
தீதறுபராபரை வேதமாமுதல்விதிரு
      
வாலைதிரிபுரையழகியே!

நூதனி – என்றும் புதியதானவள்: புரந்தரை – கங்கை; நிராமயி – வாதனைகளற்றவள்; புராரி – சிவபெருமான்; நிதாந்தகலிகை – மேன்மையான இளம்பூவரும்பு போன்ற குமரிப்பெண்; செங்கதிர்க்கோதை – அருணப்ப்ரகாசம் வீசும் பாலிகை; ஆதியந்தமிலி – முதலும், முடிவுமற்றவள்.

****

பாலையை வணங்குபவர்கட்கு அஷ்டமா சித்திகளும்
எளிதாகக் கைகூடுவது:-

5.மூலபதுமத்திலொரு முகமாய்மனம்கட்டி
      
முழுசிரத்தையொடுநின்னை
  
சீலமாய்ப்பாவிக்கும் யோகசாதகருக்கு
      
சிரசரோசத்தினின்று
  
கோலநின்மலசுகா தீதபியூடமழை
      
கொட்ட, வாய்க்காதுபோமோ
  
சாலசித்திகளெட்டும்? சாலீனையானதிரு
      
வாலைதிரிபுரையழகியே

மூலபதுமம் – மூலாதாரம்; சீலமாய் – நல்லொழுக்கத்தோடு; சிரசரோசம் – ஸஹஸ்ரார கமலம்; நின்மலசுகாதீத பியூடமழை – குறையிலா பேரின்ப அமுதமழை;
சாலீனை – நாணம் மிகுந்த குமரிப்பெண்.

மூலாதாரத்தில் வாசியையடக்கி ஏகாக்ரமான பாவனையுடன் ஸ்ரீபாலாம்பிகையான உன்னை நல்லொழுக்கம் கைவிடாமல் முழுசிரத்தையோடு த்யானம் செய்கின்ற யோகசாதகர்களுக்குக் குண்டலியின் ஏற்றத்தினால் ஸஹஸ்ரார சக்ரத்திலிருந்து குறையற்ற பேரின்பமயமான அம்ருதமழை கொட்டும்போது எங்ஙனம் அஷ்டமாசித்திகளும் கிடைக்கப்பெறாமல் போகும்?

****

மும்மூன்றாக உள்ளவை அனைத்தும் மூவெழுத்து மந்திரத்தின்
பரிணாமமே என்பது:-

6.முப்பாதமுற்றகா யத்திரியுமுத்தீயும்
      
முத்தேவர்முச்சக்தியும்
  
தப்பாதமூன்றுபுரு டார்த்தமும்வருணமும்
      
முக்காலமுந்நாடியும்
  
முப்பாருமுக்குணமுமூவேதமுச்சுரமும்
      
மும்மூன்றெனானவையெலாம்
  
முப்புரைஅநாதீத தற்பரையுன்வடிவுதிரு
      
வாலைதிரிபுரையழகியே!

முப்பாதமுற்ற காயத்திரி – மூன்று வரிகளைக்கொண்ட காயத்ரி மந்த்ரம்
முத்தீ – கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற மூன்றுவகை அக்நிகள்.
முத்தேவர் – ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரர்.
முச்சக்தி – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.
மூன்று புருடார்த்தங்கள் – அறம், பொருள், இன்பம்.
வருணங்கள் – ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்கள்.
முந்நாடி – இடை, பிங்களை, சுழுமுனை.
முப்பார் – பூமி, ஸ்வர்கம், பாதாளம்.
முக்குணம் – ஸத்வம், ரஜஸ், தமஸ்.
முச்சுரம் – ஓங்காரத்தின் வடிவங்களான அகாரம், உகாரம், மகாரம்.

இவ்வுலகில் எவையெல்லாம் மும்மூன்றாகத் தோற்றமளிக்கின்றனவோ, அவையெல்லாம் அம்பிகையின் ‘த்ரிபுரை’ என்ற பெயரை அனுசரித்தே விளங்குகின்றன எனும் கருத்தே இப்பாவில் அமைந்திருப்பது.

****

தேவாதிகள் போற்றும் அன்னை தேகாதிகட்குற்ற துன்பங்களை
நீக்கவேண்டும் என்று வேண்டுகோள்:-

7.ஓராதசித்தியொடு மூவாததேசுற்ற
      
யோகாதிவீரர்குழுவும்
  
தேவாதிகளும்முனிவர் ஏகாந்ததவசிகளும்
      
தேடியுனையேத்திமகிழ்வார்
  
தேகாதிகட்குற்ற தீராதவாதனைகள்
      
தானாயுடைந்துபொடிய
  
வைகாதெனைக்காக்க வருவாய்கனிந்துதிரு
      
வாலைதிரிபுரையழகியே!

யோகாப்பியாசத்தால் எண்ணற்ற சித்திகளைப்பெற்று மூப்பு, நரை இல்லாத பொலிவுற்ற சித்தர்குழாமும், தேவாதி பதினெண்கணங்களும், முனிவர்களும், ஏகாந்தமான நிட்டையில் ஈடுபட்டுள்ள குருமார்களும் உனைத்தேடியடைந்து துதித்து மகிழ்கின்றனர். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆத்மாவிற்கும் ஏற்படக்கூடிய தீராத வாதனைகளும் தானாகவே அழிந்து விலகிப்போகும்வண்ணம், சற்றும் தாமதம்செய்யாது எனைக்காக்க மனம் கனிந்து வருவாயாக.

****

அம்பிகையை த்யானிப்பது ஸர்வமங்களங்களையும் அருளும் என்பது:-

8.ஆயிநின்மூவெழுத் தாதிமந்திரமுமுன்
      
அருளொளிருமழகுமுகமும்
  
தூயநிட்களையுனது துயரறுகடாட்சமும்
      
தெளிவொடுன்னுபவர்வாழ்வில்
  
நோயறும்வறுமைகெடும் செல்வம்செழிக்குமதி
      
ஞானமும்நலமும்வளரும்
  
ஓயுமடியோடுகொடு வினைகளும், வாழ்கதிரு
      
வாலைதிரிபுரையழகியே!

ஆயி – அன்னை; மூவெழுத்து ஆதிமந்திரம் – த்ரியக்ஷரி என்ற பாலா மந்த்ரம்; நிட்களை – எங்கும் நிரம்பியிருப்பதால் கூறுபடாதவள்; உன்னுதல் – த்யானித்தல்.

****

(நன்றி: உ.இரா.கிரிதரன்.)

Part 11 – ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் – 2 , Part 10, Part 9, Part 8, Part 7, Part 6, Part 5, Part 4, Part 3, Part 2, Part 1. தஸ மஹாவித்யா, ஸான்னித்ய ஸ்தவம்,

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in “யம் யம் சிந்தயதே காமம் தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்”, வாலை வணக்கம், Dasa Maha-Vidhya, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.