Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!”

யந்திர ராஜாய வித்மஹே
மகா யந்திராய தீமஹி
தன்னோ யந்திர ப்ரசோதயாத் – என்றும்

மந்திர ராஜாய வித்மஹே
மகா மந்திராய தீமஹி
தன்னோ மந்திர ப்ரசோதயாத் – என்றும்,

யந்திரங்களில், எல்லா யந்திரங்களுக்கும் (கணபதி யந்திரம், முருகன் யந்திரம் முதலான) தலையாயது ஸ்ரீ சக்ர யந்திரம் ஆகும், எனவே இதை யந்திர ராஜம் என்பர். அதுபோல நமது சமய வழிபாடுகளில் அனைத்து மந்திரங்களுக்கும் ஸ்ரீ வித்யா மந்திரமே தலையாயது என்பதால் மந்திர ராஜம் எனும் இவ்வழிபாடு சிறப்பு பெறுகிறது.

சிதம்பரம் பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் நடராஜர் 14 தடவை தனது டமருகத்தை அடித்து ஒலி எழுப்பினார். முதலில் ஒன்பது தடவையும் பின்னர் ஐந்து தடவையும் மங்கள ஒலி எழுப்பினார். ஒன்பது என்பது தேவிக்குரிய நவாக்ஷாரி,  ஐந்து என்பது சிவனுக்குரிய பஞ்சாட்சரம். மேலும், தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அன்னைக்குரிய இடது காலால் நடராஜர் அருள் பாலிக்கிறார். சக்திக்குரிய நவாக்ஷரி மந்திரத்தை முன்னிலைப்படுத்திய நடராஜர், அருள் பாலிப்பது சக்தியின் மூலமே என்பதைப் போல இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.

 chakra5

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, whatsapp:- +91 96774 50429

This entry was posted in Auspicious Sri Chakra, சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ சக்கரம்!, ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா தந்த்ரம்,, ஸ்ரீயந்த்ரம், Sri Chakra, Sri Chakram, Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.