Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | குரு தாத்பர்யம் | Definition of GURU

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

குரு

குரு

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

குரு – தாத்பர்யம் – குரு – க+உ, ர+உ

 

‘க’ ஸித்தியளிப்பது

‘க’ என்பது ஸித்தி தருவது. ஸித்தி என்றால் லட்சியத்தை ஸ்திரமாக ஸாதித்துக் கொள்வது. எந்த வித்யையைக் கற்றுக் கொண்டாலும் அதன் லட்சியத்தைப் பிடித்து, எந்நாளும் நழுவாமல் தக்க வைத்துக் கொள்வது ஸித்தி.

அட்சரங்களுக்கு அந்தர்கதமாக (உள்ளூர) அநேக சக்திகள் உண்டு. அதை வைத்துத்தான் மந்த்ரங்கள் என்ற அட்சரக் கோர்வை (கோவை) கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருப்பதில் க (ga) என்ற சப்தத்திற்கே ஸித்தி தருகிற சக்தி இருப்பதாக ச்லோகம் சொல்கிறது ‘ககார: ஸித்தித: ப்ரோக்த:’

அப்படிச் சொன்னதால் குரு முறைப்படிச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும், சிஷ்யன் முறைப்படிக் கற்றுக் கொள்ளாவிட்டாலுங்கூட, அவருக்குச் சொல்லிக் கொடுப்பதில் ஸித்தியும் இவனுக்கும் கற்றுக்கொள்வதில் ஸித்தியும் கிடைத்துவிடும் என்று அர்த்தமாகாது. எப்போதும் யதாவிதியான புருஷ யத்தனம் இருக்க வேண்டும் – நாம் செய்ய வேண்டியதை நன்முயற்சிகளோடு உரிய முறையில் செய்தேயாக வேண்டும். அப்படிச் செய்தும் அநேக ஸமயங்களில் ப்ரதிபந்தகங்கள் (இடையூறுகள்) ஏற்பட்டு ஸித்தி கிடைக்காமல் தோல்வி ஏற்படுகிறதல்லவா? அப்படி நேராமலிருப்பதற்கு தெய்வாநுகூலம் வேண்டும். அந்த தெய்வாநுகூலத்தை உண்டாக்கித் தரும் பல உபாயங்களில் சப்த சக்தியும் ஒன்று. அதைத்தான் ‘க’ காரம் செய்கிறது – ககார ஸித்தித ப்ரோக்த -‘ககாரம் ஸித்தி தருவது என்று சொல்லப்படுகிறது’….

‘க’ (ga) – காரத்திற்கு ரொம்பவும் உத்கர்ஷம் (உயர்வு) உண்டு. புனர்ஜன்மா இல்லாமல் பண்ணிக் கொள்வதற்கு, அதாவது மோட்சம் அடைவதற்கு க (ga) – வில் ஆரம்பிக்கும் நாலு பேரை ஹ்ருதயத்திலே ஸ்மரித்தால் போதும். என்ன அந்த நாலு?

“கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே”

கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்று ‘க’ காரத்தில் ஆரம்பிக்கிற நாலு பேர்கள்தான். வடக்கத்திக்காரர்களிடம், கார்த்தாலே எழுந்தவுடனே இந்த நாலு பேரைச் சொல்கிற வழக்கம் இருக்கிறது. இங்கே பிறவிப் பயன் என்ற ஜீவித ஸித்தியாகிய பிறவாமையைத் தருகிற நாலே ‘க’ வில் ஆரம்பிப்பதாகச் சொல்லியிருக்கிறது. நான் சொன்ன குரு லக்ஷண ச்லோகத்தில் பொதுவாக, க காரம் ஸித்தி ப்ரதம் என்று இருக்கிறது ககார: ஸித்தித: ப்ரோக்த:

ரேப: பாபஸ்ய ஹாரக: “‘ர’ என்ற அட்சர சப்தம் பாபத்தைப் போக்குவது.”

‘ர’ : பாபத்தைப் பொசுக்குவது

குரு என்பவர் சிஷ்யனுக்கு ஸித்தி தருகிறார் என்பதை ‘க’ காட்டுகிறது. அவனுடைய பாபத்தை அவர் போக்குகிறார் என்பதை ‘ர’ காட்டுகிறது. அக்னியை மூட்டி பஸ்மீகரம் பண்ணுகிறாற்போல இவனுடைய பாபத்தை அவர் பஸ்மமாக்கிவிடுகிறார். ‘ரம்’ என்பதுதான் அக்னிபீஜம்.

ஒரு ககாரமும், ஒரு ரேபமும், இரண்டு உகாரமும் சேர்ந்து உருவாகியுள்ள ‘குரு’ என்ற வார்த்தையில் ‘க’வுக்கும் ‘ர’வுக்கும் விளக்கம் கொடுத்தாயிற்று: க-ஸித்தி தருவது, ர-பாப ஹரணம்; பாபத்தை அக்னியாக பஸ்மம் பண்ணுவது.

பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றின் சக்தியையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டிருப்பதாக ஐந்து அட்ரங்கள் – பீஜாட்சரங்கள் என்று பீஜம் (என்றால்) விதை என்று தெரிந்திருக்கும். ஒரு சின்னூண்டு பீஜம் எப்படி ஒரு மஹா வ்ருக்ஷத்தை உள்ளே அடக்கிக் கொண்டிருக்கிறதோ அப்படி தெய்விகமான சக்திகளை அடக்கிக் கொண்டிருக்கும் அட்சரங்களே பீஜாட்சரம் என்கிறவை. அப்படிப் பஞ்ச மஹாபூதங்களுக்கு ஒவ்வொன்று உண்டு. ப்ருத்விக்கு ‘லம்’. அப்புக்கு ‘வம்’. தேயுவுக்கு ‘ரம்’ – தேயு என்கிற தேஜஸ் அக்னிதான். வாயுவுக்கு ‘யம்’. ஆகாசத்திற்கு ‘ஹம்’.

ரேபம் அக்னி தத்வம். அக்னி ஒரு வஸ்துவை பஸ்மீகரம் பண்ணுகிற மாதிரி ரேபம் பாபத்தைப் பொசுக்கி விடும். தாரக நாமம் என்று கொண்டாடப்படுகிற ராம நாமா அந்த ரேபத்தில்தான் ஆரம்பிக்கிறது.

‘உ’ திருமாலின் வடிவம்

(‘குரு’ என்பதிலுள்ள ஒலிகளில்) ‘உ’ பாக்கி. முதலெழுத்தான் ‘கு’, கடைசி எழுத்தான ‘ரு’ இரண்டிலும் ‘உ’ சேர்ந்திருக்கிறதால் அதற்கு விசேஷம் இருக்கவேண்டும். அதற்கு என்ன அர்த்தம், விளக்கம் சொல்லியிருக்கிறது?

 உகாரோ விஷ்ணுரவ்யக்த: – உகாரம் விஷ்ணு ஸ்வரூபம்

ப்ரணவம் த்ரிமூர்த்தி ஸ்வரூபம். அது அ-உ-ம் என்ற மூன்று எழுத்தால் ஆனது. அ+உ =ஓ. ‘ஓ’ வுக்கு அப்புறம் ‘ம்’ – மகாரம். இந்த மூன்று எழுத்துக்கள் முறையே ப்ரம்ம, விஷ்ணு, ருத்ரர்களைக் குறிப்பவை. அதாவது அ என்பது ப்ரம்மா, உ- விஷ்ணு. அதுதான் நமக்கு விஷயம், ம-ருத்ரன் ‘ம்’ என்பதை நீட்டி முடிப்பதில் இன்னும் இரண்டு ஸூட்சம சப்தங்கள். அவற்றுக்கு சப்தம் என்ற பேரே சொல்வதில்லை, வேறே இரண்டு பேர்கள். அவை (முறையே) மஹேச்வரன், மாயை என்றெல்லாம் சொல்கிற மாயா சக்தியையும், அந்த சக்தியும் போய் ஒடுங்கி விடுகிற ஸதாசிவம் என்ற பரம ஸத்யத்தையும் குறிக்கிறவை. அது இருக்கட்டும்… கு-ரு என்று இரட்டித்து வருகிற உகாரம் விஷ்ணு ஸ்வரூபம்.

உகாரோ விஷ்ணுரவ்யக்த:- ‘விஷ்ணு: அவ்யக்த:’ ‘உகாரமென்பது அவ்யக்தமாக இருக்கப்பட்ட விஷ்ணு ஸ்வரூபம்’.

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan@yahoo.com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.