Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | குண்டலினி யோகம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

குண்டலினி

குண்டலினி

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”குண்டலினி யோகம் என்றால் என்ன?”

முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். யாரும் தனியாக முயல வேண்டாம்.

மூலாதாரம்: 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத் துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழுவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது.

இதன் அதி தேவதை: விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி.

இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம்.

உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.

ஸ்வாதிஷ்டானம்: மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தது போல் இருக்கும்.

உணர்வுகள்: மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும்.

இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி

நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.

மணிப்பூரம்: தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.

உணர்வுகள்: தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.

அதி தேவதை: வாஹினி, ருத்ரன், லாகினி

உடல் பாகங்கள்: ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.

நானும் யோகா கற்றுக்கொண்டு தினமும் பயிற்சியும் செய்யகிறேன். ஆனால் என்னுடைய யோககுரு என்னுடைய உடல்நிலைக்குத் தகுந்த யோக ஆசனங்களைத் தவிர்த்து மற்றதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. குண்டலினி யோகம் பற்றிப் பேசி இருக்கிறோம் என்றாலும் அவர் அதை எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் கற்றுக் கொண்டது வெறும் மூச்சுப் பயிற்சி எனும் ப்ராணாயாமம் தான். சிலர் அதையே குண்டலினி யோகப் பயிற்சி எனவும் நினைத்துக் கொள்ளலாம். ஏனெனில் “சவாசனம்” என்னும் அசையா நிலை யோகத்தில் நம் உடலின் உள்ளங்கால் முதல் ஆரம்பித்து உச்சந்தலை வரை உடலை அமைதிப் படுத்த முயற்சி செய்வோம். அந்த நிலையில் கூட ரொம்பவே ஆழமான அப்பியாசம் வேண்டாம் என என்னுடைய யோக குரு சொல்லி இருக்கிறார். திரும்பி வரத் தாமதம் ஆவதோடு இல்லாமல் உலக இயல்புக்கு மாறுபட்டு விடுகிறார்கள் என்றும் சொல்லுவார். யோக ஆசனங்கள் செய்யும்போது நம் மனது அதில் ஒருமைப் பட்டால் போதுமானாது என்பது அவர் எனக்குச் சொன்ன முக்கியமான ஆலோசனை. இதை நினைவில் வைத்துக் கொண்டு படிக்கவும். திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன் எனத் தவறாக நினைக்க வேண்டாம்.

அனாஹதா: மனித உடலின் இருதய பாகம் இது. 12 இதழ் கொண்ட தாமரைப்பூவடிவில் உள்ளது. பச்சை நிறமான இதற்குக் காற்றின் சக்தி உள்ளது. இந்தக் காற்று இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம்? தவிர, நாம் உள்ளிழுப்பதும் காற்றுத் தான். வெளி விடுவதும் காற்றுத் தான். விஞ்ஞானம் எல்லாம் நிரூபிக்கும் முன்னேயே மெய்ஞானம் பெற்ற நம் சித்தர்கள் ஒரு நாளும் தவறாய்ச் சொல்லவில்லை இல்லையா?

உணர்வுகள்; ஏமாற்றுதல், ஏமாறல், குழப்பமான மனநிலை, வருந்துதல், நம்பிக்கை, ஆசை, எதிர்பார்ப்பு, பாரபட்சம் இன்மை, திமிராய் இருத்தல், மட்டம் தட்டுதல், பொஸஸிவாக இருத்தல்.

ஜீவாத்மா இங்கே தான் இருக்கிறது. என் மனசே சரியில்லை, நெஞ்சு வலிக்கிறது அவன் செய்த தப்பைப் பார்த்தால் என்றெல்லாம் சொல்கிறோமே, அப்படிப் பட்ட மனித மனத்தின் இன்ப, துன்ப நிலக்குக் காரணமான மனோதத்துவத்தைச் செயல் ஆற்றுவது இங்கே தான்.

அதி தேவதைகள்: வாயு, இஷா, காகினி.

உடலில் இது இருக்கும் இடம்: இருதயம், தோல், உடல்நிலையைச் சமமாக வைத்திருக்கும் இது சரியாகச் செயல்பட்டால்.

விஷுத்தா: கழுத்துப் பாகம். 16 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்பு. இது எல்லை இல்லாத அகன்ற பரந்த ஆகாயத்தைக் குறிக்கிறது. ஆகையால் ஆகாயம் எவ்வாறு நிறமற்றதோ அவ்வாறே இதுவும் நிறமற்றது. நாம் செய்யும் வேலைகளில் எது சரி, எது தப்புன்னு முடிவு எடுக்கப் படும் இடம் இங்கே தான். நம்முடைய கற்பனா சக்தி பெருகுவதற்கும், நம்முடைய சுயம் வெளிப்படுவதும் இங்கே இருந்து தான். இது “பிந்து” சக்கரத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. இங்கே விஷமும் தயார் நிலையில் உள்ளது. அமிர்தமும் தயார் நிலையில் உள்ளது. நாம் எதை எடுத்துக்கறோம் என்று சொல்வது நம்முடைய எண்ணங்களைப் பொறுத்து. சிலபேர் சுடுசொல் சொல்லும் போது விஷம் போல் பேசுகிறான் என்கிறோம். அவன் வார்த்தையை விழுங்க முடியவில்லை. அவ்வளவு விஷம் என்கிறோம். எல்லாம் வருவது இங்கே இருந்து தான். நம் உள்ளம் பால் போல் இருந்தால் அமிர்த மயமான வாக்குப் பிறக்கும். நம்முடைய “விதி” யின் ரகசியம் இங்கே தான் உள்ளது. நம்முடைய பேச்சிலும், செயலிலும் விதி நிர்ணயிக்கப் படுகிறது. இது மூடிக் கொண்டால் மரணம் சம்பவிக்கும். திறந்து கொண்டால் நேர் எதிமாறாக நடக்கும். நாம் முக்தி நிலையைத் தன்னால் அடைகிறோம். எப்படி எனில் நம்முடைய எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் மாறி ஞான மார்க்கத்தில் மனமும், உடலும் திரும்பும். ஞான மார்க்கத்தை விரும்பிக் கற்பர்.

அதி தேவதைகள்: அம்பாரா, சதாசிவம், ஷாகினி.

உடல் பாகம்: தைராயிடு சுரப்பிகளும், காதுகளும்.

இவை இல்லாவிட்டால் உடல் வளர்ச்சியும் இல்லை, மன முதிர்ச்சியும் இல்லை.

ஆஜ்ஞா: நம்முடைய இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பெண்கள் நெற்றிப் பொட்டு வைக்கும் இடத்தில் உள்ளது. நெற்றிப் பொட்டைப் “பிந்து” என்று சொல்லும் வழக்கமும் உண்டு. இந்தப் பிந்து இதற்குப் பின்னால் தான் இருக்கிறது. அடுத்து அதைத் தான் பார்க்கப் போறோம். இந்த அஜ்னா இருக்கும் இங்கே தான் இட நாடி, பிங்கள நாடியுடன் சேர்ந்து வரும் சூஷ்மன நாடியும் சேரும். இந்த மூன்று நாடிகளும் நம் நெற்றிபோட்டில் தான் ஒன்று சேர்கின்றன. இங்கே வரும் குண்டலினி சக்தியானது இங்கிருந்து மேலே உள்ள ஸஹஸ்ராரத்துக்கு மேல் எழும்பும்.

உணர்வுகள்: தூக்கத்தில் நாம் காணும் கனவு இதனால் உணரப் படுகிறது. நம்முடைய கற்பனைக் கனவுகளும் இதனால் உணரப் படுகிறது. நாம் படுத்துக் கொண்டு காணும் கனவு மட்டுமில்லாது, பகல் கனவும் கூட இதனால் உணரப் படுகிறது.

அதி தேவதைகள்: அர்த்த நாரீஸ்வரர், ஹாகினி சக்தி

பிந்து: இது சக்கர வடிவில் ஆனது. நம்முடைய தலைக்குப் பின்னால் நாம் சாதாரணமாய்த் தலையை முடிந்து கொள்ளும் இடத்தில் உள்ளது. இது ஒரு சின்னப் புள்ளியைப் போல் தோன்றும். இங்கே அடி பட்டால் என்ன வேணாலும் நடக்கலாம். நம் முன்னோர்கள் பின்னந்தலையில் மட்டும் அடி படவே கூடாது என்பதோடு அந்தக் காலங்களில் ஆண்களும் முடி வளர்த்துக் குடுமி வைத்திருப்பார்கள். அதன் காரணமே இந்தப் “பிந்து”வைப் பாதுகாக்கத் தான். இப்போதும் ஆங்கில மருத்துவத்தில் தலையில் குறிப்பாய்ப் பின்னந்தலையில் அடிபடுவது கூடாது எனச் சொல்லப் படுகிறது. இங்கே அமிர்தமும் உற்பத்தி ஆகும், விஷமும் உற்பத்தி ஆகும். நம்முடைய உடலும், மனமும் இயங்குவது இதன் மூலம் தான். தேக்கி வைக்கப் பட்ட வெள்ள நீர் போல் இங்கே நம்முடைய செயல்களைப் பொறுத்து “ஆனந்தப் பெருவெள்ளமும்” ஏற்படலாம். மாறாகவும் ஏற்படலாம். ஒண்ணுமே இல்லாமலும் இருக்கலாம். ஒரு நீர்த்தேக்கம் போன்றது. இங்கிருந்து தான் “ஓங்காரம்” பிறக்கிறது. தோன்றி மறைகிறது. அல்லது புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருகிறது. புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேருவது தான் உத்தமம். இது நம் உடலின் விஷுத்த சக்கரத்தோடு சேர்ந்து வேலை செய்யும். இது சரியாக இயங்காவிட்டால் அசைவுகளே இல்லை. சிலருக்கு ஏற்படும் புத்தி மாறாட்டத்துக்கும் இதுவே காரணம்.

ஸஹஸ்ராரம்: கடைசியில் முடிவுக்கு வந்துட்டோம். இது தான் நாம் கிடைக்குமா, கிடைக்குமா என ஏங்கும் இடம். ஆயிரம் இதழ் தாமரைப் பூவின் உருவம் கொண்ட இது தான் எல்லாவற்றுக்கும் மூலப் பொருள். 20 மடிப்புக்கள் கொண்ட இந்தத் தாமரைப் பூவின் ஒவ்வொரு மடிப்பிலும் 50 இதழ்கள் கொண்டது.

நம்மைப் பற்றில் இருந்து விடுபடச் செய்யும் இது. இறை சக்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஒன்றே தேவன், தேவனே ஒன்று” என அனைத்தையும் இறைவனாய்ப் பார்க்கும் பெருந்தன்மையான எண்ணம் இங்கே தான் தோன்றும். அனைத்துக்கும் ஆதாரம். இறைவனின் இருப்பிடம். நம்ம மதுரையம்பதி அம்பாளின் இருப்பிடம்னு சொல்லுவார். அப்படியும் சொல்லலாம். “ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி” யான “ஸ்ரீலலிதை” உறைவிடம்னும் சொல்லலாம். இதைக் கண்டு உணர்ந்தவர் வெகு சிலரே ஆவார். பாரதியார் அவர்களில் ஒருவர். இதைத் தான் அவர் தன்னுடைய “அக்கினிக் குஞ்சு” பாட்டின் மூலம் சொல்லுவதாய்க் கேள்விப் பட்டிருக்கிறேன்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!”

என்று தன்னுடைய மனதில் ஒரு சிறு பொறி போல் இருந்த இறை உணர்வு, மனதின் சகல ஆசா பாசங்களையும் பொசுக்கி விட்டு மனத்தை நிர்மலமாய் வைத்தது என்கிறார். பெறற்கரிய பேறு பெற்றதாய்ப் பெருமையுடம் ஆடியும் பாடுகிறார். இறைவனைக் காணாமல் இவ்வாறு கவலை இல்லாமல் குதிக்க முடியுமா? பொறி என்னமோ சின்னது தான். இருந்தாலும் ஒரு பொறி போதுமே என்கிறார் மனதைச் சுட்டுப் பொசுக்க.

இதில் இருந்து தான் “சக்தி” மற்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும். பிரதான சக்தி என்றும் சொல்லலாம். நீரில் இருந்து எவ்வாறு மின்சாரம் எடுக்கப் பட்டு நம் அனைவரையும் வந்து அடைகிறதோ அது போல் இங்கிருந்து தான் நமக்குத் தேவையான மூலசக்தி கிடைக்கிறது.

ஆனால் நாம் அதைச் சரியாகப் பிரயோகம் செய்வது இல்லை. மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும், அல்லது உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழுப்பிப் படிப் படியாக மேலே கொண்டு வந்து அது பிந்து வெள்ளத்துடன் ஒன்று சேர்ந்து ஸஹஸ்ராரத்தை அடையும்போது மனிதன் “சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில்” மூழ்குகிறான். யோக சித்தி கிடைக்கிறது. தான் யார் என்பதை உணருகிறான்.

இந்த யோகத்தை பின் பற்றித் தான் “சிதம்பரம்” கோயில் கட்டப் பட்டுள்ளது. அநேகமாய்த் தென்னாட்டில் குறிப்பாய்த் தமிழ்நாட்டுக் கோயில் அமைப்புக்களும் சரி, கோயில் கோபுரங்களும் சரி, இம்மாதிரியான யோகக் கலையைப் பின்பற்றித் தான் கட்டப் பட்டது. கட்டியவர்களும் இதன் அர்த்தத்தை முழுதும் உள்வாங்கிக் கொண்டு தான் கட்டினார்கள். காலத்தைக் கடந்து நம் கோயில்கள் நிலைத்து இருப்பதே இதனால்தான். அதுவும் மூலஸ்தானக் கோபுரங்கள் அநேகமாய் ஸஹஸ்ரார முறையில் தான் கட்டப்பட்டருக்கிறது.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

This entry was posted in குண்டலினி, குண்டலினி யோகம் என்றால் என்ன?, ஸ்ரீ வித்யா தந்த்ரம், and tagged , , , , , . Bookmark the permalink.