Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?

திருவிளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?

திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை

அவசியம் செய்ய வேண்டும். நீங்களே தனியாகவும் செய்யலாம். பல சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு வரவழைத்தும் செய்யலாம். வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது போன்ற மங்களகரமான செயல் வேறு எதுவும் கிடையாது. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடியமர்ந்து விடுவாள்

ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும்.

சித்திரை – தான்யம் பெருகும்
வைகாசி – தனம் உண்டாகும்
ஆனி – திருமணம் கைகூடும்
ஆடி – ஆயுள் உறுதிபடும்
ஆவணி – புத்திர பாக்கியம் உண்டாகும்
புரட்டாசி – பசுக்கள் பெருகி செல்வம் பெருகும்
ஐப்பசி – பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை – மோட்சம் கிடைக்கும்
மார்கழி – ஆரோக்கியம் உண்டாகும்
தை – வாழ்வில் வெற்றி உண்டாகும்
மாசி – பாவங்கள் விலகும்
பங்குனி – தர்மம் நிலைக்கும்..

அந்தந்த மாதப்பலனை பிரார்த்தித்து பூஜை செய்வோம்..

திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?

திருவிளக்கு வழிபாட்டில் 19 பகுதிகள் உள்ளன. அவற்றை விவரமாக பார்ப்போம்.

1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு
2. தேவையான பொருட்கள்
3. பூஜைக்குத் தயாராகுதல்
4. கணபதி வாழ்த்து
5. தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல்
6. தேவி வாழ்த்து
7. திருவிளக்கு அகவல்
8. திருவிளக்குப் பாடல்
9. கலசபூஜை
10. அர்ச்சனை செய்யும் முறை
11. அர்ச்சனை 108
12. போற்றுதல் முறை
13. போற்றுதல் 108
14. நிவேத்யம்
15. பாட்டு
16. தீபாராதனை
17. வலம்வருதல்
18. மங்களம்
19. பிரார்த்தனை

1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு

திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது.

ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர்.

 2. தேவையான பொருட்கள்

திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப் பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன.

3. பூஜைக்குத் தயாராகுதல்

(i) திருவிளக்கை சுத்தம் செய்தல்

திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும்.

(ii) பீடம் அமைத்தல்

திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும். திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்கு படுத்தி வைக்கவேண்டும்.

(iii) அலங்காரம் செய்தல்

திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம், குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும்.

(iv) பூஜைக்கு அமருதல்

திருவிளக்கில் எண்ணெய் விட்டு, குறைந்த பட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாது. கற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது.

பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும். திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் சொல்லுக: ஓம்.

ஸர்வே பவந்து ஸகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

 4. கணபதி வாழ்த்து

(i) ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

(ii) கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்

ஓம் ஸுமுகாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விக்ன ராஜாய நம:
ஓம் தூம கேதவே நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் கணாத்யஷாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ஸர்ப்பகர்ணாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி

 5. தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல்

கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும்.

தீபம் ஏற்றும்போது

 ”ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி”

என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும்.

”ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக”.

6. தேவி வாழ்த்து

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே

7. திருவிளக்கு அகவல்

விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரி போட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப்பிச்சை தனங்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா
புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா
வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான்பணிந்தேன்.

 8. திருவிளக்குப் பாடல்

 (ரகுபதி ராகவ அல்லது நீலக்க்கடலின் ஓரத்தில் மெட்டு)

மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்குதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவே
இருளை நீக்கும் விளக்கிதுவே
இன்பம் ஊட்டும் விளக்கிதுவே
அருளைப் பெருக்கும் விளக்கிதுவே
அன்பை வளர்க்கும் விளக்கிதுவே
இல்லம் தன்னில் விளக்கினையே
என்றும் ஏற்றித் தொழுதிடவே
பல்வித நன்மை பெற்றிடலாம்
பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம்
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.

 9. கலச பூஜை

கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

”கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு”

பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.

பின் கீழ்வருமாறு சொல்லுக :

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை – அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை – புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் – கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே

10. அர்ச்சனை செய்யும் முறை

ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.

11. அர்ச்சனை – 108

1. ஓம் சிவாயை நம:
2. ஓம் சிவசக்த்யை நம:
3. ஓம் இச்சா சக்த்யை நம:
4. ஓம் க்ரியா சக்த்யை நம:
5. ஓம் ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நம:
6. ஓம் ஜ்யோதி லக்ஷ்ம்யை நம:
7. ஓம் தீப லக்ஷ்ம்யை நம:
8. ஓம் மகா லக்ஷ்ம்யை நம:
9. ஓம் தன லக்ஷ்ம்யை நம:
10. ஓம் தான்ய லக்ஷ்ம்யை நம:
11. ஓம் தைர்ய லக்ஷ்ம்யை நம:
12. ஓம் வீர லக்ஷ்ம்யை நம:
13. ஓம் விஜய லக்ஷ்ம்யை நம:
14. ஓம் வித்யா லக்ஷ்ம்யை நம:
15. ஓம் ஜய லக்ஷ்ம்யை நம:
16. ஓம் வர லக்ஷ்ம்யை நம:
17. ஓம் கஜ லக்ஷ்ம்யை நம:
18. ஓம் காம வல்யை நம:
19. ஓம் காமாக்ஷி ஸுந்தர்யை நம:
20. ஓம் சுப லக்ஷ்ம்யை நம:
21. ஓம் ராஜ லக்ஷ்ம்யை நம:
22. ஓம் க்ருஹ லக்ஷ்ம்யை நம:
23. ஓம் ஸித்த லக்ஷ்ம்யை நம:
24. ஓம் சீதா லக்ஷ்ம்யை நம:
25. ஓம் ஸர்வ மங்கள காரிண்யை நம:
26. ஓம் ஸர்வ துக்க நிவாரிண்யை நம:
27. ஓம் ஸர்வாங்க ஸந்தர்யை நம:
28. ஓம் ஸெளபாக்ய லக்ஷ்ம்யை நம:
29. ஓம் ஆதி லக்ஷ்ம்யை நம:
30. ஓம் ஸந்தான லக்ஷ்ம்யை நம:
31. ஓம் ஆனந்த ஸ்வரூபிண்யை நம:
32. ஓம் அகிலாண்ட நாயக்யை நம:
33. ஓம் பிரம்மாண்ட நாயக்கை நம:
34. ஓம் ஸுரப்யை நம:
35. ஓம் பரமாத்மிகாயை நம:
36. ஓம் பத்மாலயாயை நம:
37. ஓம் பத்மாயை நம:
38. ஓம் தன்யாயை நம:
39. ஓம் ஹிரண்மய்யை நம:
40. ஓம் நித்யபுஷ்டாயை நம:
41. ஓம் தீப்தாயை நம:
42. ஓம் வஸுதாயை நம:
43. ஓம் வஸுதாரிண்யை நம:
44. ஓம் கமலாயை நம:
45. ஓம் காந்தாயை நம:
46. ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
47. ஓம் அனகாயை நம:
48. ஓம் ஹரிவல்லபாயை நம:
49. ஓம் அசோகாயை நம:
50. ஓம் அம்ருதாயை நம:
51. ஓம் துர்க்காயை நம:
52. ஓம் நாராயண்யை நம:
53. ஓம் மங்கல்யாயை நம:
54. ஓம் கிருஷ்ணாயை நம:
55. ஓம் கன்யாகுமார்யை நம:
56. ஓம் ப்ரஸன்னாயை நம:
57. ஓம் கீர்த்யை நம:
58. ஓம் ஸ்ரீயை நம:
59. ஓம் மோஹ நாசின்யை நம:
60. ஓம் அபம்ருத்யு நாசின்யை நம:
61. ஓம் வியாதி நாசின்யை நம:
62. ஓம் தாரித்ரிய நாசின்யை நம:
63. ஓம் பயநாசின்யை நம:
64. ஓம் சரண்யாயை நம:
65. ஓம் ஆரோக்யதாயை நம:
66. ஓம் ஸரஸ்வத்யை நம:
67. ஓம் மஹாமாயாயை நம:
68. ஓம் புஸ்தக ஹஸ்தாயை நம:
69. ஓம் ஜ்ஞான முத்ராயை நம:
70. ஓம் ராமாயை நம:
71. ஓம் விமலாயை நம:
72. ஓம் வைஷ்ணவ்யை நம:
73. ஓம் ஸாவித்ரியை நம:
74. ஓம் வாக்தேவ்யை நம:
75. ஓம் பாரத்யை நம:
76. ஓம் கோவிந்த ரூபிண்யை நம:
77. ஓம் சுபத்ராயை நம:
78. ஓம் திரிகுணாயை நம:
79. ஓம் அம்பிகாயை நம:
80. ஓம் நிரஞ்ஜனாயை நம:
81. ஓம் நித்யாயை நம:
82. ஓம் கோமத்யை நம:
83. ஓம் மஹாபலாயை நம:
84. ஓம் ஹம்ஸாஸனாயை நம:
85. ஓம் வேதமாத்ரே நம:
86. ஓம் சாரதாயை நம:
87. ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
88. ஓம் சர்வாபாணபூ ஷிதாயை நம:
89. ஓம் மஹாசக்த்யை நம:
90. ஓம் பவான்யை நம:
91. ஓம் பக்திப்பிரியாயை நம:
92. ஓம் சாம்பவ்யை நம:
93. ஓம் நிர்மலாயை நம:
94. ஓம் சாந்தாயை நம:
95. ஓம் நித்ய முக்தாயை நம:
96. ஓம் நிஷ்களங்காயை நம:
97. ஓம் பாபநாசின்யை நம:
98. ஓம் பேதநாசின்யை நம:
99. ஓம் ஸுகப்ரதாயை நம:
100. ஓம் ஸர்வேச்வர்யை நம:
101. ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை நம:
102. ஓம் மனோன்மன்யை நம:
103. ஓம் மஹேச்வர்யை நம:
104. ஓம் கல்யாண்யை நம:
105. ஓம் ராஜராஜேச்வர்யை நம:
106. ஓம் பாலாயை நம:
107. ஓம் தர்ம வர்த்தின்யை நம:
108. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

பின் பூக்களை எடுத்து நெஞ்சோடு சேர்த்து வைத்து:-

‘ஓம் நானாவித மந்த்ர பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி’.
என்று சொல்லி சமர்ப்பிக்கவும்.

12. போற்றுதல் முறை

எல்லோரும் இருகரம் கூப்பி, திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதவேண்டும். கண்கள் திருவிளக்கிலும் மனம் அம்பிகையிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.

13. போற்றுதல் 108

1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4. மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10. பேரருட் கடலாம் பொருளே போற்றி
11. முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
13. அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15. ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
17. மங்கள நாயகி மாமணி போற்றி
18. வளமை நல்கும் வல்லியை போற்றி
19. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
20. மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22. தையல் நாயகித் தாயே போற்றி
23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
24. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26. சூளாமணியே சுடரொளி போற்றி
27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
38. ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44. உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54. தில்லைப் பொது நட விளக்கே போற்றி
55. கருணையே உருவாம் விளக்கே போற்றி
56. கற்பனை கடந்த ஜோதி போற்றி
57. அற்புதக்கோல விளக்கே போற்றி
58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59. சிற்பர வியோம விளக்கே போற்றி
60. பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64. பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
66. அருவே உருவே அருவுரு போற்றி
67. நந்தா விளக்கே நாயகியே போற்றி
68. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
69. தீபமங்கள் ஜோதி போற்றி
70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
71. பாகம் பிரியா பராபரை போற்றி
72. ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
75. ஆழியான் காணா அடியோய் போற்றி
76. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82. இருநில மக்கள் இறைவி போற்றி
83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
89. தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
90. ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94. புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
96. பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99. செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102. நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103. தாயே நின்னருள் தருவாய் போற்றி
104. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

14. நிவேத்யம்

நிவேத்யப் பொருள்களை அம்பிகைக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். எல்லோரும் சொல்லுக.

ஓம் ப்ரம்மார்ப்பணம் ப்ரம்மஹவிர்
ப்ரம்மாக்னெள ப்ரம்மணாஹுதம்
ப்ரம்மைவ தேன கந்தவ்யம்
ப்ரம்மகர்ம சமாதினா

பின் கீழ் ஆறு மந்திரங்களைச் சொல்லி ஆறுதடவை நிவேத்யத்தை வலது கைவிரல்களால் எடுப்பது போலவும் தேவிக்கு ஊட்டுவது போலவும் சைகை காட்டவும்.

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
அபானாய் ஸ்வாஹா
வ்யானாய ஸ்வாஹா,
உதானாய ஹ்வாஹா
ஸமானாய ஹ்வாஹா
பிரம்மணே ஸ்வாஹா

15. பாட்டு

ராமன் பிறந்தது நவமியிலே
நட்ட நடுப்பகல் வேளையிலே
கண்ணன் பிறந்தது அஷ்டமியில்
காரிருள் நடுநிசி வேளையிலே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)

ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய் பார்த்தனர் மக்கள் எல்லாம்
கண்ணன் பிறந்தது கடுஞ்சிறையில்
கண்டவர் தாயும் தந்தையுமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)

சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன் பெருமை சேர்த்திடவே
சந்திர குலத்தில் கண்ணனுமே
வளர்ந்தனன் பெருமை தந்திடவே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)

மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டினான் ராமனுமே
மாயாஜாலம் பல புரிந்து
காட்டினன் நீலக்கண்ணனுமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)

ராமன் பெற்ற குணங்களெல்லாம்
நாமும் பெற்று மகிழ்ந்திடவே
கண்ணன் கீதையில் கூறியதை
கருத்தில் கொண்டு உயர்ந்திடுவோம்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் (4)

வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியைக் காட்டிய கண்ணனையும்
வாழ்வில் என்றும் மறவோமே
மறவோம் மறவோம் மறவோமே
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்

ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் ஸ்ரீராம்
ஜெயராம் ஜெய ஜெயராம் ஸ்ரீராம் ஜெயராம்

ஜெய ஜெயராம்

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
(அம்மா…கற்பூர)

கண்ணிரண்டு உன்னுருவே காணவேண்டும்
காலிரண்டு உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்
எண்ணமெல்லாம் உன்நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா
மகளுடைய குறைகளை நீ தீருமம்மா
(அம்மா…கற்பூர)

நெற்றியினில் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினில் உன் திருநாமம் நிலவவேண்டும்
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும்
சுற்றமெல்லாம் நீடுழி வாழவேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்கு சொல்லலாமா
மடிமீது பிள்ளை எனைத் தள்ளலாமா (அம்மா…கற்பூர)

16. தீபாராதனை

எல்லோரும் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுக. திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். கற்பூரம் காட்டும்போது எல்லோரும் சேர்ந்து சொல்லுக.

திங்கள் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ
அங்கியில் ஜோதி நீ அனைத்திலும் ஜோதி நீ
எங்களுள் ஜோதி நீ ஈஸ்வர ஜோதி நீ
சுங்கிலா ஜோதி நீ கற்பூர ஜோதியே

பின் திருவிளக்கின் முன் கற்பூர தீபத்தை வைத்து மலரால் வலம் சுற்றி திருவிளக்கிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

கற்பூர தீபத்தைத் தொட்டு கண்ணிலும் தலையிலும் நெஞ்சிலும் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் கற்பூர தீபத்தை தொட்டுக்கொள்ள, நின்ற இடத்தில் நின்றவாறே கொடுக்க வேண்டும்.

பின் நமஸ்காரம் செய்து எழுந்து நின்று வலம்வரத் தயாராக வேண்டும்

17. திருவிளக்குகளை வலம் வருதுல்

எல்லோருமாக தேவி நாமம் கைதட்டிப் பாடிக்கொண்டு மூன்று முறை வலம் வருக.

நாமம்:-

ஜெய் ஜெய் தேவி
ஜெய் ஸ்ரீ தேவி

பின் நமஸ்காரம் செய்து அமர்ந்து மங்களம் பாடி நிறைவு செய்க.

18. மங்களம்

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம்-தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம்-ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம்-வேணுகிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம்-ராதாகிருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்

19. பிரார்த்தனை

கண்களை மூடி இருதய கமலத்தில் அம்பிகை வீற்றிருப்பதைக் காணுக. அமைதியாக கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்லுக.

ஓம் ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா:
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக வாழ்க! எல்லோரும் நோயின்றி வாழ்க! எல்லோருக்கும் மங்களம் உண்டாகுக! ஒருவரும் துன்புறாதிருக்க வேண்டும்!

ஒம் அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

பொய்யிலிருந்து என்னை மெய்மைக்கு வழி நடத்துவாயாக
அஞ்ஞான இருளிலிருந்து ஞானஜோதிக்கு வழி நடத்துவாயாக
மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ண மாதாய
பூர்ண மேவாவசிஷ்யதே!

ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி

இரண்டு நிமிஷம் தியானம் செய்க ‘ஹரி ஓம் தத் ஸத்’ எனச் சொல்லி தியானம் நிறைவு செய்க.

பின் சுடர்விடும் தீபங்களை மலரால் நிறுத்தி பிரசாதங்களை அவரவர்களே எடுத்துக் கொள்ளவும் குங்குமத்தை கவனமாக எடுத்துச் சென்று தினமும் பொட்டு இட்டுக் கொள்ளவும் சர்வ மங்களங்களும் உண்டாகும்.

(அர்ச்சனை செய்த மலர்களைக் காலால் மிதிக்காமல் நீர் நிலைகளிலோ சுத்தமான இடங்களிலோ போடவும். தீர்த்த ஜலத்தை கால் மிதிபடாத இடத்தில் இடவும்).

சுபம்

This entry was posted in திருவிளக்கு பூஜை and tagged , , , , , , , , . Bookmark the permalink.