விடுமுறையில் வீட்டுக்கல்வி

விடுமுறையில் வீட்டுக்கல்வி:

பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை தொடங்கி விட்டது, விடுமுறைக் கால வகுப்புகள் ஆங்காங்கே துவங்கி விட்டன, குழந்தைகளுக்கு இந்த வகுப்புகள் தேவைதான் என்றாலும் கூட பள்ளிக் கூடங்களிலும் சிறப்பு வகுப்புகளிலும் கற்றுக் கொடுக்காத சில முக்கியமான வித்யைகளும் இருக்கின்றன, அதாவது நமது வேத சாஸ்திர புராணக்கதைகள் தத்துவ விஷயங்கள், நமது ஆசாரங்கள், ஸம்ப்ரதாயங்கள், குடும்பப் பழக்க வழக்கங்கள், கடவுள் பக்தி, வேதாந்த அறிவு, போன்றவை பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ கற்பிக்கப்படுவதில்லை, இவற்றை நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் முதன் முதல் ஆசிரியர் (குரு) தாயும் தந்தையுமே, பெற்றோர்கள் மூலம் கற்றுக்கொள்ளும் கல்வி மிகச்சிறப்பு வாய்ந்தது, மதிப்புமிக்கது, ஆகவே பெற்றோர்கள், தனக்கு எந்த வித்யை எதுவரை எவ்வளவு தெரியுமோ, அவற்றைத் தன் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும், இதுதான் உயர்வான சீரான கல்விமுறை இதனால் குழந்தைகளுக்கு பெற்றோரின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

நமது வம்சப் பெரியோர்களின் குணாதிசயங்களை கடந்து வந்துள்ள கடினமான வாழ்க்கையைச் சொல்லலாம், புராண இதிஹாஸக்கதைகள் சின்னச்சின்ன ச்லோகங்கள் ஆகியவற்றை சொல்லித்தரலாம். உபன்யாஸங்கள் நாம ஸங்கீர்த்தனம் சொந்த கிராமம், கோவில் திருவிழா ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்லலாம், சின்னஞ்சிறிய வேலைகளை செய்யச் சொல்லலாம், குளித்தல் துணி தோய்த்தல் போன்ற தன்வேலைகளைத் தானாகவே செய்து கொள்ளப்பழக்கலாம்.

வீட்டில் இருக்கும் போது சாஸ்த்ரீய உடைகளான வேஷ்டி, பாவாடையுடனும், நெற்றியில் குங்குமம், திருமண், விபூதி ஆகியவற்றுடன் இருக்கச்சொல்லலாம், வீட்டில் தெய்வங்களுக்கு அபிஷேகம் அர்ச்சனை பூஜை செய்வது எப்படி? என்று சொல்லிக்கொடுக்கலாம், அவர்களை விட்டே பூஜை செய்யச் சொல்லலாம்.

குழந்தைகளுக்கு நமது சாஸ்திரங்களையும் பழக்க வழக்கங்களையும் ஆசாரத்தையும் போதிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை, அதற்கு விடுமுறை நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பளிக்கிறது, ஆகவே விடுமுறைக் காலங்களில், குழந்தைகளுக்கு பள்ளிகளில் கிடைக்காத, நமது கலாசாரத்தை பண்பாட்டை பழக்க வழக்கங்களை முன்னோர்களது வாழ்க்கைமுறையை பகவத்பக்தியை கற்றுத்தந்து அவர்களை பண்புள்ளவர்களாக கலாசாரப் பற்றுள்ளவர்களாக பாதுகாக்க ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.