Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | “என்னையே எனக்குக் கொடு” | Give me Myself

“என்னையே எனக்குக் கொடு”

பாலாம்பிகை

பாலாம்பிகை

உண்மையான பக்தன் ஒருவன், பரமேஷ்வரனுக்குப் பூஜை செய்ய விரும்புகிறான். உடனேயே அவனுக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிடுகிறது. ஈஸ்வரனிடமே கேட்கிறான். ஈச்வரா. நான் உனக்கு உபச்சாரம் செய்வதாக நினைத்துப் பூஜை செய்தாலும் உண்மையில் அபசாரம் செய்வதாகத் தோன்றுகிறது. திரிலோகமும் வியாபித்த உன் திருவடியை நான் ஒர் உத்தரணி தீர்த்தத்தால் அலம்ப முடியுமா. விசுவாகரமான உன் சரீரத்திற்கு இந்த சிறிய வஸ்திரத்தைக் கட்டி மூட முடியுமா. உனக்கு நமஸ்காரம் பண்ணினால், என் காலை எந்தப் பக்கம் நீட்டினாலும் நீ தான் இருக்கிறாய். ஆனபடியால் உனக்கு நேரே காலை நீட்டிய தோஷம் அல்லவா எனக்கு ஏற்படுகிறது. சரி பூஜையே வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யப் பார்த்தால், எல்லாம் அறிந்த ஸர்வக்ஞான உன்னிடம் பிரார்த்திப்பதும் அபச்சாரமாக அல்லவா இருக்கிறது. பிரார்த்தனை என்றால் உனக்குத் தெரியாதவற்றை நான் கேட்பதாகத்தானே ஆகும். நீ ஸர்வக்ஞன் என்பதற்கு என் பிரார்த்தனையே குறைவு உண்டாக்குகிறது. இருந்தாலும் பிரார்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிற அளவுக்கு நான் குறை உள்ளவனாகவே இருக்கத்தானே செய்கிறேன். அதனால் அந்தக் குறை நீங்குவதற்காக உன்னிடம் எதைப் பிரார்த்திப்பது எல்லாமான நீயேதான் நானாகவும் ஆகியிருக்கிறாய் என்று தெரியாமல் என்னைக் குறைவு படுத்திக் கொண்டிருக்கிறேனே. இந்தக் குறையை நீக்கு என்றே பிரார்த்திக்கிறேன். நீ அகண்ட ஆனந்த ஸ்வரூபம். உன்னைத் தவிர வேறில்லை என்று வேதம் சொல்கிறது.  இருந்தாலும் பூரண ஆனந்தமாக உனக்கு வேறாக இப்படிக் கோணலும் மாணலுமாகக் குறையோடு நான் ஒருத்தன் இருப்பதுபோல் தோன்றுகிறதே. இல்லாவிட்டால் அழுதுகொண்டு இப்படி நான் பிரார்த்தனை பண்ண வரவேண்டியதே இல்லையே. இப்படி நான் உனக்கு வேறாக இருப்பதாகத் தோன்றுவதைப் போக்கடி. போக்கினால் நீதான் எல்லாமும், நீதான் நானும். அதாவது நான்தான் எல்லாமும் என்றாகும் அதாவது உன்னிடம் நான் இதைத்கொடு அதைக்கொடு என்று வெளி வஸ்துக்களைக் கேட்கவில்லை. என்னையே எனக்குக் கொடு என்றே பிரார்த்திக்கிறேன். இப்படிச் சொல்கிறார் அந்த பக்தர். இந்த ரீதியிலேயே சிவ மானஸிக பூஜா என்ற ஸ்தோத்திரத்தில் பிரார்த்தித்திருக்கிறார் ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்திராள்.

மஹ்யம் தேஹி ச பகவான்

மதீயமேவ ஸ்வரூபம் ஆனந்தம்

என் ஆனந்த ஸ்வரூபத்தையே எனக்குக் கொடு என்கிறார்.

இப்போது நாம் எல்லோரும் நம் நிஜ ஸ்வரூபத்தை விட்டுவிட்டு வேஷத்தில் இருக்கிறோம். நமக்கு வேண்டியவர்களை விட்டுவைத்தால் தவிக்கிறோமே, நம்மையே விட்டுவிட்டதற்கு எவ்வளவு தவிக்க வேண்டும். நம் ஆனந்த ஆத்ம ஸ்வரூபத்தோடு அதுவே நாமாக எப்போது கலக்கப்போகிறோம் என்ற தவிப்பும், அதைப்பற்றிய நினைப்பும் நமக்கு ஸதா இருக்க வேண்டும். பரமாத்மாவுடன் கலப்பதற்காக இப்படிச் சகிக்கமுடியாமல் தவிப்பதுதான் உண்மையான பிரேமை. அந்தப் பிரேமைக்குத்தான் பக்தி என்று பெயர். இதற்கு முதல்படியாக வெளிப்பூஜை, கோயில்வழிபாடு எல்லாம் வேண்டியிருக்கிறது. உலக நினைப்பே ஒயாத காரியமாக இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் இவைதான் பரமாத்மாவை நினைக்கச் சாதனங்களாகும். இந்தக் கட்டத்தில் ஸ்வாமி கோவிலில் மட்டுமின்றி எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறார். நாமும்கூட அவரேதான் என்று நாம் உணராவிட்டாலும் பரவாயில்லை. மூல விக்கிரகத்தில்தான் ஸ்வாமி இருக்கிறார் என்று நினைத்து, கோவில் தூணிலேயே நாம் பிரசாதக் கையை துடைத்துவிட்டு வந்தாலும் பாதகமில்லை. மூல விக்கிரகத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயப்பட்டு அங்கே துடைக்காத அளவிற்கு வந்திருக்கிறோமல்லவா. ஸ்வாமி இல்லவே இல்லை என்று நினைக்காமல் எங்கேயோ ஒரிடத்திலாவது ஸ்வாமி இருக்கிறார் என்று பயபக்தியுடன் ஆரம்பித்தாலே போதும். சிரத்தை தளராமல், நம்பிக்கை மாறாமல், அப்பியாசம் செய்துகொண்டே இருந்தால், நாளாவட்டத்தில் ஸ்வாமி எங்கும் இருக்கிறார், எல்லாமாக இருக்கிறார் என்பது புத்திக்குப் புரியும். புத்திக்குப் புரிவது அநுபவமாக ஆவதற்கு, என்னையே எனக்குக் கொடு என்று பிரார்த்திக்கொண்டிருக்க வேண்டும். ஞானாம்பிகை கிருபை செய்வாள்.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.