Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | நந்தன வருட பலன்

நந்தன வருஷம் எப்படி இருக்கும்?

நாகலிங்கப்பூ

நாகலிங்கப்பூ

ஜோதிட சாஸ்திரத்தில் வருஷ ஜாதகம் என்ற முறையில் ஒவ்வொரு வருடமும் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வழக்கம் உண்டு. தமிழக சித்தர் மரபில் பெரிய வருஷாதி நூல் என்ற நூலில் தமிழ் வருடம் அறுபதுக்கும் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வெண்பா வடிவில் எழுதப்பட்ட அப்பாடல்களில் அந்த வருடம் எப்படி இருக்கும், மழை மற்றும் வேளாண்மை பற்றிய தகவல்கள் இருக்கும். ஆனால் நாகரீகம், நகரமயமாக்கல் என்று நம் வாழும் சூழலை நாம் சூறையாடிவிட்ட பின் இயற்கையை பற்றி கூறப்பட்ட அப்பாடல்கள் தற்சமயம் பயன்படுமா என தெரியவில்லை.

வேத ஜோதிடத்தின் அடிப்படையில் இவ்வருடம் எப்படி இருக்கும் என முதலில் பார்ப்போம்.

மேஷ ராசியில் குரு, சூரியன், ரிஷபத்தில் கேது- சுக்கிரன், சிம்மத்தில் செவ்வாய், துலா ராசியில் சனி வக்ரத்தில், மகரத்தில் சந்திரன், மீனத்தில் புதன் இருக்க இவ்வருடம் பிறந்திருக்கிறது. இக்கிரக அமைப்பால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்

1) அரசியலில் மாற்றம் உண்டாகி மந்திரிகள் மற்றும் தலைமை பீடத்தில் இருப்பவர்களின் அதிகாரம் மாற்றப்படும். ஊழல்வாதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபடுவார்கள்.
2) மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு பகிர்மானம் ஓரளவு சீராகும்
3) விளையாட்டு அரங்கில் இந்தியா கவனிக்கப்படும் நாடாக அமையும்.
4) பொருளாதார வீக்கம் சீராகும்.
5) வெளிநாட்டு முதலீடுகள் பங்களிப்புகள் உயரும்.
6) ஆன்மீக தேடலும் ஆன்மீக சேவை அதிகரிக்கும்
7) உதவும் மனப்பான்மையும் சேவைகள் அறக்கட்டளை பணிகள் விரிவடையும்.

கிரகத்தால் இவ்வருடம் ஏற்படும் தீமைகள் என்ன என பார்ப்போம்

1) வேளாண்மை குறையும். மழை, நிலத்தடி நீர் அளவு குறையும்.
2) பெண்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மிகும்.
3) கலாச்சார தன்மைகள் வேறுபட்டு இளைஞர்கள் தடம் மாறுவார்கள்.
4) இயற்கை சீற்றங்கள் குறிப்பாக நில அதிர்வு மற்றும் குண்டு வெடிப்பு மூலம் குழு மரணம் நிகழும்.
5) புதிய வகை தொற்று நோய்கள் பரவும்.
6) மக்களின் உரிமைகள் பாதிக்கும் புதிய அடக்கு முறை சட்டங்கள் இயற்றப்படும்.
7) அதிக பொருளாதார ஆசை காட்டும் நிதி நிறுவன மோசடிகள் பெருகும்.

ராசி பலன் எழுதுவதில் என்றும் எனக்கு உடன்பாடு இருந்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் தனித்துவமானது. இறைவனின் படைப்பு அப்படிபட்டது. ஒவ்வொருவருக்கும் அவர் அவர் ஜாதகமே பலனை அளிக்கும். இந்திய மக்கள் அனைவரையும் 12 ராசிகளுக்குள் பிரித்து பலன் சொல்லுவது முட்டாள்தனம் அல்லவா?. இருந்தாலும் 12 ராசிகளின் பலன்களை சுருக்கமாக இங்கே தருகிறேன். சொல்லப்பட்ட பலனில் 1% உங்கள் வாழ்க்கையில் நடந்தாலே அது மிகப்பெரிய வெற்றி.

மேஷம்: வேலை-இடமாற்றம், நல்ல வருமான சேர்க்கை, வாழ்க்கை துணைவருடன் பிரச்சனை

ரிஷபம்: உடல் நலத்தில் சிக்கல், கோர்ட் வழக்கு, புதிய சொத்துக்கள் சேர்க்கை, பயணம்

மிதுனம்: புதிய தொழில், புகழ், குழந்தைகளால் பிரச்சனை, சபலத்தால் மதிப்பு இழத்தல்

கடகம்: உடல் புத்துணர்வு, புதிய தொடர்புகள், அரசு சார்ந்த உதவி, அதிகாரம்.

சிம்மம்: ஆன்மீக பயணம், உடல் நலமின்மை, பொருளாதார தேக்க நிலை, தைரிய குறைவு

கன்னி: திடீர் அதிர்ஷ்டம், வாழ்க்கை துணைவரை பிரிதல்- கருத்து வேறுபாடு, அரசு சார்ந்த சிக்கல், கடல் தொல்லைகள்.

துலாம்: வருமான வளர்ச்சி, புதிய திட்டங்கள், தாய் வழி சொத்து சேர்க்கை, உடல் நலமின்மை

விருச்சிகம்: தொற்று நோய், சிறந்த தொழில் வளர்ச்சி, இடமாற்றம், பெரியோர்கள் மூலம் உதவி பெறுதல்

தனுசு: ஆன்மீக ஈடுபாடு, குழந்தைகள் மூலம் வளர்ச்சி, சோம்பல் அதிகரிப்பு, கண் நோய்

மகரம்: வாழ்க்கை துணைவர் மூலம் வளர்ச்சி, தகவல் பிழையால் இழப்பு, பூர்வீக சொத்தில் மாற்றம்.

கும்பம்: அரசு சார்ந்த உதவி, தொழிலில் / வேலையில் மறைமுக எதிரிகள், வழக்கில் தோல்வி, நம்பிக்கை இன்மை

மீனம்: உடல் எடை குறையும், பொருளாதாரம் அளவுக்கு அதிகமாக பெருகும், கெட்ட சகவாசம் ஏற்படும், பழிச்சொல் விழும்.

மேற்கண்ட பொதுப்பலன்களும் தனி ராசிகளின் பலன்கள் மனித அறிவு கொண்டு ஜோதிடனால் கணிக்கப்பட்டது. இறையருளினால் மெய்ஞான துணை கொண்டு ப்ரார்தனை செய்தால் இவை எல்லாம் பொய்த்துவிடும்.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.