Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Temple and Info | கோவிலும் தகவலும்.

ஒவ்வொரு திருக்கோவில் உருவானதற்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அவற்றில் பல, விசித்திரமாக இருக்கும் ஒன்றைப் பார்க்கலாம். வாருங்கள்!

கதிர்காம கதிரேசன்

கதிர்காம கதிரேசன்

அடர்ந்த காடு. பறவைகளின் ஓசைகளும், அவ்வப் போது எழுந்த மாடுகன்றுகளின் ஓசைகளும் காட்டில் அமைந்திருந்த ஆசிரமங்களின் இனிமையை அதிகமாக்கி கொண்டிருந்தன. சாப்பாட்டை முடித்துக் கொண்டு முனிவர் இதயாம் பரம், ஆசிரமத்தின் வெளிப் புறத்தில் இருந்த திண்னையில் வந்து அமர்ந்தார். சற்று நேரத்தில் அவர் மனைவியும் வந்தாள். அதற்காகவே காத்திருந்தைப் போல, இதயாம் பரம் பேசத் தொடங்கினார். “ம்! நம் மகன் கல்யாணம், குருகுல வாசம் முடித்து வந்துவிட்டான். ஏதோ படித்தோம் என்று இல்லாமல், நன்றாகவே படித்திருக்கிறான். இனிமேல் அவனுக்கு நல்லவளாக ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட்டால், நன்றாக இருக்கும். நீ அவனிடம் பேசிப் பார்த்தாயா?” என மனைவியிடம் கேட்டார் . “எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அவன் அசைவதாக இல்லை; கல்யாணமே வேண்டாம் என்கிறான்” என்று பதில் வந்தது, அப்போது…

“நான் சொல்வதில் என்ன தவறு?” என்று கேட்டபடியே வந்த கல்யாணம் பெற்றோர்களை வணங்கி எழுந்தான். முனிவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். பார்வதி-பரமசிவன், மகாலக்ஷ்மி-மகாவிஷ்ணு, சரஸ்வதி-பிரம்மா; லோபாமுத்ரை-அகஸ்தியர் எனப் பல்வேறு தம்பதிகளைச் சொல்லி இல்லறத்தின் மேன்மைகளை எல்லாம் விவரித்தார். என்ன சொல்லியும் பலனில்லை. கல்யாணம், “எனக்குத் திருமணம் வேண்டாம்” எனத் தீர்மானமாக மறுத்துவிட்டான்.

தந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில்,”கல்யாணம்! என்ன சொல்லியும் நீ கேட்பதாகத் தெரியவில்லை. இனி உன்னை நிர்பந்தப் படுத்தப் போவதில்லை. எங்களுக்கு மகனாக பிறந்த நீ, இப்போது நான் சொல்வதையாவது நிறைவேற்று! அகஸ்தியரிடம் போ! இனி மேல் நீ செய்ய வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை அவர் உனக்குச் சொல்லுவார். நீ அவரிடம் போ!” என்று மகனிடம் சொன்னார். திருமணத்தைத் தான் கல்யாணம் மறுத்தானே தவிர, தந்தையின் வார்த்தைகளுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை. உடனே போய், பொதிகை மலையில் அகஸ்தியரைத் தரிசித்தான் கல்யாணம். அவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவரிடமும் தன் மறுப்பைப் பணிவோடு பதிவு செய்த கல்யாணம், “குருநாதா! எனக்கு ஏதாவது நல்வழி காட்டுங்கள்!” என வேண்டினான்.

அகஸ்தியர் ஒருசில விநாடிகள் யோசித்தார். பிறகு, “சரி, கல்யாணம்! அருகில் வா. நான் உனக்கு ஆறுமுகனின் மந்திரத்தை உபதேசம் செய்கிறேன்” என்று சொல்லிக் கல்யாணத்திற்கு மந்திர உபதேசம் செய்தார். அதன்பின் கல்யாணத்திடம் ஒரு சிறு பெட்டியை ஒப்படைத்து, “இது பத்திரம். இதற்குள் ஓர் அபூர்வமான யந்திரம் இருக்கிறது. நீ மந்திரத்தை உருவேற்று. மாபெரும் ஜோதி ஒன்று காலப் போக்கில் வந்து இந்தப் பெட்டியில் உள்ள யந்திரத்தில் ஐக்கியமாகும். அதன் பிறகு நீ இதை எங்காவது வைத்து வழிப்பாட்டைத் தொடர்ந்து செய்யலாம். ஜோதி ஐக்கியமான பிறகு அதை நடுவில் எங்காவது வைக்காதே! உனக்கு தோன்றும் நல்லதொரு இடத்தில் வை! ஆறுமுகன் உனக்குத் துணையிருப்பான். நல்ல நிலை பெறுவாய். சென்று வா!” என்று கூறி விடை கொடுத்தார். அகஸ்தியரை மறுபடியும் வணங்கிய கல்யாணம், அவர் தந்த சிறு பெட்டியோடு புறப்பட்டான்.

சிற்றருவிகள் சூழ்ந்த காட்டில் உட்கார்ந்து, தவம் செய்யத் தொடங்கினான். அகஸ்தியர் உபதேசித்த மந்திரம் அவன் உள்ளத்தில் உருவேறிக் கொண்டிருந்தது. வெயில், மழை, காற்று என எதையும் பொருட்படுத்தாமல் கல்யாணம் தவம் செய்து கொண்டிருந்தான். ஒரு நாள், காட்டில் திடீரெனத் தீப்பிடித்தது. சற்று நேரத்திலேயே அத்தீ மளமளவெனப் பரவி, காடு முழுவதும் எரியத் தொடங்கியது. பறவைகளும் மிருகங்களும் கூக்குரலிட்டபடிப் பறந்தோடின. ஆனால் கல்யாணமோ அசையவில்லை; தவத்திலேயே ஊன்றிப் போயிருந்தான்.

கொஞ்ச நேரத்தில், காடு முழுவதும் பற்றியிருந்த தீ ஒரு மாபெரும் கோளமாக உருண்டு திரண்டு கல்யாணம் நோக்கி ஓடிவந்தது. அப்போதும் கல்யாணம் அசையவில்லை. வேகமாக வந்த தீப்பந்து கல்யாணம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவன் வைத்திருந்த பெட்டியில் வந்து ஐக்கியமானது. அதே விநாடியில் காடு முழுவதும் அமைதி திரும்பியது. கல்யாணம் குதூகலத்தில் குதித்தான். “ஆஹா! ஆஹா! அகத்திய மாமுனிவர் சொன்னது பலித்துவிட்டது. இனிமேல் இந்த யந்திரப் பெட்டியை ஏதாவது ஒரு நல்ல இடத்தில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு முன்னால், நதியில் குளித்து நம் உடம்பில் படிந்துள்ள புழுதிப் படலங்களை நீக்கி தூய்மை பெறவேண்டும். நதிக்குப் போகலாம்” என்று சொல்லி, யந்திரப் பெட்டியுடன் புறப்பட்டான் கல்யாணம்.

போகும் போதே அவன் உள்ளம், “நம் கையில் உள்ள இந்த யந்திரப்பெட்டியைக் கீழே வைக்கக்கூடாது. ம்… என்ன செய்யலாம்?” எனச் சிந்தித்தான். அதற்குப் பதில் சொல்வதைப் போல, கல்யாணம் நதிக்கரையை நெருங்கும் போது, பச்சைப் பாவாடையும் மஞ்சள் சட்டையும் அணிந்த ஒரு சிறுமி அங்கு வந்தாள். அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். அவளைப் பார்த்ததும் கல்யாணம் மகிழ்ந்தான். அவளை நெருங்கி, “அம்மா! நீ யார்? நான் குளித்து விட்டு வரும் வரை இந்தப் பெட்டியை நீ வைத்திருப்பாயா? கீழே வைக்க கூடாது” என்றான். அதற்கு, “ஐயா, நான் ஒரு குறப்பெண். காட்டில் சுற்றுவதே என் வேலை. கொடுங்கள்! உங்கள் பெட்டியை நான் பத்திரமாக வைத்துக் கொள்வேன்” என்று வாக்குறுதியும் கொடுத்தாள் அந்த பெண். கல்யாணம் திருப்தியோடு தன் கையிலிருந்த பெட்டியை அவளிடம் ஒப்படைத்து விட்டு நதியில் இறங்கினான். ஒரு முழுக்கு முழுகி விட்டு நிமிர்ந்து கரையில் பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். அங்கே… யந்திரப் பெட்டியுடன் அவன் நிற்க வைத்திருந்த பெண் இல்லை. அவள் சற்று தூரத்தில் பெட்டியுடன் ஓடிக் கொண்டிருந்தாள். திடுக்கிட்ட கல்யாணம் தண்ணீரில் இருந்து வெளிப்பட்டு, அவளைப் பின் தொடர்ந்து ஓடினான். ஓட்டம் நீடித்தது. சற்று நேரத்தில் கல்யாணம் ஏதோ ஒரு பாறையின் மீது மோதியவனைப் போல, எதன் மீதோ மோதிக் கொண்டு நின்றான். நிமிர்ந்து பார்த்தால்…..

வள்ளி – தெய்வானையோடு முருகப் பெருமான் நின்றிருந்தார். கல்யாணம் நடுங்கிப் போய் கண்களில் கண்ணீரோடு கைகளைக் கூப்பி வணங்கினான். முருகப்பெருமான், “கல்யாணம்! உன்னிடம் இருந்த யந்திரம் அகஸ்தியர் தந்தது. மாபெரும் சக்தி அடங்கியது. அது இருக்க வேண்டிய இடம் இது தான். அதனால் தான் அதை வள்ளியை விட்டு இங்கே கொண்டு வரச் செய்தோம். இங்கே அதற்கு வழிபாடு முறையாக நடக்கும். நீயே வழிபாடு செய். நீ இங்கு முக்தி பெறுவாய்!” என்று அருளினார். “வள்ளி நாயகியா அடியேனைத் தேடி வந்தார்!” என்று கல்யாணம் தரையில் விழுந்து வணங்கினான். தினந்தோறும் முறைப்படி, யந்திரத்தைப் பூஜை செய்தான். முடிவில், பட்டினத்தாரைப் போல கல்யாணம் சிவ லிங்கமாக ஆனான். அது சிவ லிங்கேஸ்வரர் என அழைக்கப்பட்டது. அது கல்யாணத்தால் ஸ்தாபிக்கப் பட்டதாகவும் சொல்வார்கள்.

அந்த சிவ லிங்கமும், அகஸ்தியரால் அளிக்கப்பட்ட அந்த யந்திரமும் இருக்கும் இடம்… கதிர்காம முருகன் கோயில் (சிங்களம்). அரசியல் சூழ்நிலை காரணங்களினால் (யாராவது விவரம் தெரிந்து கேட்டால் கூட), அகஸ்தியர் அளித்த அந்த யந்திரம் தற்போது மக்கள் பார்வைக்குக் காட்டப்படுவதில்லை. ஆயின் கருவரையில், எந்த மூர்த்தமும் இல்லை, கருவரையில் இருக்கும் யந்திரம் மேலே உள்ளது.

ஹிந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாமியர் என எல்லா மதத்தவரும் வழிபடும் திருத்தலம் இது.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.