Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | No – Name Religion | வைதிக மதம் – பெயரில்லாத மதம்

No – Name Religion | வைதிக மதம் – பெயரில்லாத மதம்

Religion is “reverence for God or the gods, careful pondering of divine things, piety”

மஹா பெரியவா

மஹா பெரியவா

இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியாக கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருக்கிறதல்லவா. ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்.

வடதேசத்தில் பைராகி என்று யார் வந்து யாசகம் கேட்டாலும், உடனே பிச்சை போட்டு விடுவார்கள். நம் தென்னாட்டு ஜனங்கள் அப்படிச் செய்வதில்லை என்று பைராகிகளுக்குக் குறை. அவர்கள் ஒரு பாட்டுப் பாடுகிறார்கள். அதில், ‘இல்லா போப கஹே தெலுங்கி’ – என்று ஒரு வரி வருகிறது.

தெலுங்கர்கள் (பிச்சை) இல்லை போ போ என்று விரட்டுவதாகச் சொல்கிற பாட்டு, தெலுங்கர்கள் வெள்ளு வெள்ளு என்றுதான் சொல்வார்களேயன்றி, போ போ என்று சொல்லமாட்டார்கள். போ என்பது தமிழ் வார்த்தை. தமிழர்கள்தான் அப்படிச் சொல்வார்கள். பின் பைராகிப் பாட்டு இப்படி சொல்வதற்குக் காரணம் என்ன? வடதேசத்தைவிட்டு பைராகிகள் கீழே வரும்போது முதலில் தெலுங்கு தேசம் வருகிறது. ஆனபடியால், அதற்குப் பிறகு வரும் தமிழ்நாட்டையும் தெலுங்கு தேசமாகவே கருதி விட்டார்கள் பைராகிகள்!

தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவநாடு என்பதுங்கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின்கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர். அப்புறம் வரும் பகுதிகளுக்கும் அதே பெயரை வைத்துவிட்டார்கள்.  இந்த ரீதியில்தான் ஸிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும் அதையடுத்து வந்த பாரத தேசம் முழுவதையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர்.

ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதீக மதம்.

ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

இதைப் பற்றி நினைத்தபோது எனக்கு ரொம்பவும் குறையாக இருந்தது. இது இப்படி இருக்கட்டும்.

ஒருநாள் யாரோ ராமு வந்திருக்கிறான் என்று என்னிடம் சொன்னார்கள். உடனே நான் ஏதோ நினைவில் எந்த ராமு என்று கேட்டேன். எந்த ராமுவா. அப்படியானால் ராமுக்களில் பல ராமுக்கள் இருக்கிறார்களா. எனறு எதிர்க் கேள்வி கேட்டார்கள். அப்போதுதான் எனக்குப் பழைய ஞாபகத்தில் இப்படிக் கேட்டுவிட்டோம் என்று தெரிந்தது. எங்கள் ஊரில் ராமு என்ற பெயரில் நாலு பேர் இருந்தார்கள். எனவே, அவர்களுக்குள் வித்தியாசம் தெரிந்து கொள்வதற்காகக் கறுப்பு ராமு, சிவப்பு ராமு, நெட்டை ராமு, குட்டை ராமு என்று சொல்வது பழக்கம். அதே நினைவில்தான் ஒரே ஒரு ராமு இருந்த ஊரிலும் எந்த ராமு என்று கேட்டுவிட்டேன். ஒரே ராமு இருக்கிற இடத்தில் எந்த அடைமொழியும் போட வேண்டியதில்லை.

நம் மதத்திற்கு ஏன் பெயரில்லை என்பது. உடனே புரிந்து விட்டது. பல்வேறு மதங்கள் இருக்கிறபோதுதான் ஒன்றிருந்து இன்னொன்றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்கவேண்டும். ஒரே மதம்தான் இருந்தது என்றால் அதற்குப் பெயர் எதற்கு?

நமது மதத்தைத் தவிர மற்ற மதங்கள் ஒரு மஹா புருஷரின் பெயரில் ஏற்பட்டவை. அந்தப் பெரியவருக்கு முன் அந்த மதம் இல்லை. புத்த மதம் என்றால் அது கௌதம புத்தரால் ஸ்தாபிக்கப்பட்டது. எனவே அவருக்கு முன் அது இல்லை என்கிறது. ஜைன மதம் என்றால் அது மஹாவீரர் எனப்படும் ஜீனரால் ஸ்தாபிக்கப்பட்டது. கிருஸ்து மதம் என்றால் கிறிஸ்டினால் (இயேசு கிறிஸ்து) ஸ்தாபிக்கப்பட்டது. என்றிப்படி ஒவ்வொரு மதமும் ஒரு பெரியவரால் உண்டாக்கப்பட்டது என்று தெரிகிறது. அந்தப் பெரியவர் இதை ஏற்படுத்தினார் என்னும்போதே அவருக்கு முன்னால் இது இல்லை என்று தெரிகிறது. இவ்வளவு மதங்களும் உண்டாவதற்கு முன்பே நம் மதம் இருந்திருக்கிறது. இந்த ஒரு மதமே உலகமெல்லாம் பரவி இருந்தது. இதைத் தவிர வேறு மதம் இல்லாததால் இதற்குப் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியமே இருக்கவில்லை. இதை அறிந்தவுடன் முன்பு எனக்கு இருந்த குறை மறைந்தது. அதோடு இந்த மதத்தை பற்றிக் கௌரவ புத்தியும் உண்டாயிற்று.

சரி, இந்த மதம்தான் ஆதி மதம் என்றே இருக்கட்டும். அந்த ஆதி காலத்தில் இதை ஸ்தாபித்தவர் யார் என்ற கேள்வி வரும். பெயர் இல்லாத நம் மதத்தை யார் ஸ்தாபித்தார் என்று பார்த்தால், எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தாலும், அப்படி ஒரு ஸ்தாபகரைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பிரம்ம சூத்திரம் செய்த வியாசரைச் சொல்லலாமா, கீதை சொன்ன கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்லலாமா என்றால், அவர்களும் தங்களுக்கு முன்னரே இருக்கிற வேதங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். சரி, இந்த வேத மந்திரங்களைப் செய்த ரிஷிகளை ஸ்தாபகர்கள் என்று சொல்லலாமா என்று பார்த்தால், அவர்களே நாங்கள் இந்த வேதங்களைச் செய்யவில்லை என்கிறார்கள். பின்னே உங்கள் பேரில்தானே மந்திரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தையும் உபாசிக்கிறபோது அவற்றுக்கு உங்களில் ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லித்தானே தலையைத் தொட்டுக் கொள்கிறோம். என்று கேட்டால், அந்த ரிஷிகள் எங்கள் மூலம் தான் இந்த மந்திரங்கள் லோகத்துக்கு வந்தன வாஸ்தவம். அதனால் எங்களை மந்திர ரிஷிகளாகச் சொல்லியிருக்கிறது. எங்கள் மூலம் வந்ததே ஒழிய, நாங்களே அவற்றைச் செய்யவில்லை (Compose பண்ண வில்லை). நாங்கள் அப்படியே மனம் அடங்கித் தியான நிஷ்டையில் இருக்கிறபோது இந்த மந்திரங்கள் ஆகாயத்தில் எங்கள் முன்னே தெரிந்தன. நாங்கள் அவற்றைக் கண்டவர்கள்தான் (மந்த்ரத் ரஷ்டா) செய்தவர்கள் (மந்த்ர கர்த்தா) அல்ல என்கிறார்கள்.

சகல சப்தங்களும் ஆகாசத்திலேயே பிறக்கின்றன. அவற்றிலிருந்தே த்ருஷ்டி உண்டாயிற்று. இதைத்தான் Space – ல் ஏற்பட்ட Vibration – களால் பிரபஞ்சம் உண்டானதாக ஸயன்ஸில் சொல்லியிருக்கிறார்கள். ரிஷிகள் தங்களது தபோ மகிமையால் இந்த சிருஷ்டியிலிருந்து ஜீவர்களைக் கடைத்தேற்றுகிற சப்தங்களை ஆகாசத்தில் மந்திரங்களாக் கண்டார்கள். ஆனால் அவர்கள் செய்ததல்ல இம் மந்திரங்கள். புருஷர் எவரும் செய்யாத அபௌருஷேயமாக இந்த வேதங்கள் ஆகாச ரூபமாக பரமாத்மாவிலேயே அவரது மூச்சுக் காற்றாக இருந்தவை. அவற்றையே ரிஷிச்ரேஷ்டர்கள் கண்டு உலகுதக்குத் தந்தார்கள்.

இப்படித் தெரிந்து கொண்டால் நம் மதத்தின் ஸ்தாபகர் யார் என்பது தெரியவில்லையே என்பதும் ஒரு குறையாக இல்லாமல் அதுவே பெருமைப் படுகிற விஷயமாக இருக்கும். பரமாத்மாவின் சுவாசமாகவே இருக்கப்பட்ட வேதங்களை அனுஷ்டிக்கிற அநாதி மதத்தின் வாரிசுகளாக வந்திருக்கும் மஹா பாக்கியம் நமக்குக் கிட்டியிருப்பது என்று பூரிப்பு அடைவோம்.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , . Bookmark the permalink.