Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | மஹா சிவராத்திரி நிர்ணயம் | Maha Sivarathri Nirnayam

மஹாகாளீஸ்வரர்

மஹா காளீஸ்வரர்

1. சிவராத்திரி விரதத்திற்கும், பூஜைக்கும் சௌரமானம், சாந்திரமானம் என்ற பாகுபாடே தேவையில்லை.

2. மாக க்ருஷ்ண சதுர்தசி என்பது பல ஆண்டுகளாக மாசி மாதத்தில் வந்துள்ளபடியால், எப்பொழுதும் மாசி மாதத்தில் தான் சிவராத்திரி ஏற்படும் என்று மக்களிடையே பொதுவான கருத்து ஏற்பட்டு விட்டது

3. ஆதித்யாஸ்தமயே காலே அஸ்தி சேத் யா சதுர்தசி |

தத்ராத்ரி: சிவராத்ரிஸ்யாத் ஸா பவேத் உத்தமோத்தமா  ||

பொருள்: சூரியன் அஸ்தமன நேரத்தில் சதுர்தசி இருக்கக்கூடிய நாளின் இரவே உத்தமமான சிவராத்திரி என காமிக ஆகமம் கூறுகிறது.

4. ப்ரதோஷ வ்யாபிநி க்ராஹ்யா சிராத்ரி சதுர்தசி  |

பொருள்: ப்ரதோஷ காலத்தில் த்ரயோதசியும் சதுர்தசியும் இணைந்தால் அன்றைய இராத்திரி சிவராத்திரியாக ஏற்கத் தக்கது என்பது காமிக ஆகமம்.

5. சிவராத்திரி தோன்றிய காலத்தை ஹஸ்யாத்ரி கண்டம் என்னும் நூல் கீழ்வருமாறு தெரிவிக்கிறது.

மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம் ஆதிதேவோ மஹாநிஸி  |
சிவலிங்க மபூத் தத்ர கோடி ஸூர்ய சமப்ரபம்  ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் தேய்பிறை சதுர்தசி நடு இரவில் கோடி சூரிய பிராகசத்துடன் சிவலிங்க வடிவில் இறைவன் தோன்றினார்.

6. சிவராத்திரி விரத பலனைக் கூறியுள்ள ஸ்காந்த மஹா புராணத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

அர்த்த ராத்ரயுதா யத்ர மாக க்ருஷ்ண சதுர்தசி  |
சிவராத்திரி வ்ரதம் தத்ர வாஜிமேத பலம் லபேத்  ||

பொருள்: சாந்திரமான மாக மாதத்தில் க்ருஷ்ண சதுர்தசியில் மஹா சிவராத்திரி வ்ரதம் அனுஷ்டித்தால் அஸ்வமேத பலன் கிட்டும் என்பதாகும்.

மாக மாத க்ருஷ்ண சதுர்தசியில் தான் நடுஇரவில் லிங்கோத்பவம் ஏற்பட்டது. பால்குணத்தில் அல்ல. இதுகுறித்து சிவாகமம் கூறுவதைப் பார்ப்போம்.

7. காரணாகமம்:  ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ப்ரபூஜயேத்  |

ஸந்தான ஆகமம்: ரவி கும்ப கதாத் பூர்வா மகராந்தே ஸுபூஜனம்  |

பொருள்: மேற்கூறிய ஆகம வாக்கியங்களின் பொருள், சூரியனானவர் கும்பராசிக்குள் பிரவேசிப்பதற்குள் சௌரமான மகர மாதமான தை மாதத்தில் மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படலாம் என்பதாகும்.

8. தத்திதௌ சிவராத்ரம் ஸ்யாத் மாக மாசே சதுர்தசி  |
மாக பால்குணயோர் மத்யே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசி  || காரண ஆகமம்

இங்கு சற்று கவனிக்கவும்:

மாக பால்குனயோர் மத்யேஎன்ற வாக்கியத்திற்கு விளக்கம் கூறும்போது காசியில் வசிக்கும் ப்ரும்மஸ்ரீ கணேஸ்வர திராவிட் சாஸ்திரிகள் பல சிவாகம நூல்களை ஆராய்ந்து கூறுவதாவது:

அமாவாசையில் முடியும் சாந்திரமான மாக மாத க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியிலும், பௌர்ணமியில் முடியும் பால்குண மாத க்ருஷ்ண பக்ஷ சதுர்தசியிலும் மஹா சிவராத்திரி ஏற்படலாம்.

9. கோகுலாஷ்டமியிலிருந்து 185 ஆவது நாள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

10. மேலும் திதியானது முன் பின் இருப்பினும் திருவோண நட்சத்திரத்துடன் கூடிய சதுர்தசி மஹா சிவராத்திரி என்பது சாஸ்திர சம்மதம்.

ஆகவே பக்தர்கள் இனிவரும் காலங்களில் மாசி கிருஷ்ண சதுர்தசி வரும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்தியில் விரதம் இருந்து அனுஷ்டித்து வரும்படி கோருகிறோம்.

சுபம்

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.