தை அமாவாசை ஆனால் முழு மதி வந்த தினம் | Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம்

அன்னை அபிராமி
அன்னை அபிராமி

தை அமாவாசை ஆனால் அமாவாசையை முழு நிலவு நாள் ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும், திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம். அந்த நிகழ்ச்சியின் சிறு வரலாறு இதோ–

அபிராமி பட்டர் என்று பின்னாளில் அறியப்பட்ட சுப்பிரமணியன் என்ற அந்தணர், அபிராமி அம்மையின் மேல் மிகவும் பக்தி கொண்டு இருந்தார். அவர் சமய தத்துவ சாத்திரங்களில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் இவர் பட்டர் என்று அழைக்கப்பட்டார். அவர் தமிழ் மற்றும் வடமொழி இண்டிலும் வல்லவராகவும் விளங்கினார். அவருக்கு பார்க்கும் இடமெல்லாம் எம் அம்மையின் வடிவாகவே தோன்றியது.

ஒரு முறை சரபோஜி மன்னர், தை அமாவாசையன்று திருக்கடவூர் கோயிலுக்கு வந்தார். நிஷ்டையிலிருந்த    பக்தரை நோக்கி ‘இன்று என்ன திதி?` என்று கேட்டார். அன்னையின் முழுநிலவு போன்ற திருமுகத்தையே மனக்கண்ணால் கண்டுகொண்டிருந்த அவர், தை அமாவாசையைப் பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். உடனே அரசன் அது “மதி கெட்ட தினம்” (சந்திரன் தோன்றாத தினம் அதாவது அமாவாசை, சுப்ரமணியருக்கு அறிவு கெட்ட தினம்) என்று பட்டரை நோக்கி சிலேடையாகக் கூறி இன்று நீர் முழு நிலவை காட்டக் கூடுமோ? என்றார். பட்டரும் அதற்கு உடன்பட்டார். பட்டரின் இந்த கூற்றினால் கோபம் கொண்ட மன்னன் இன்று இரவு முழு நிலவு தோன்றவில்லை என்றால் உமக்கு சிரச்சேதம் என்று கட்டளையிட்டார். அன்னையின் அருளின் மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்த பட்டர் அசரவில்லை.

திருக்கடவூர் இறைவியாகிய அபிராமியின் அருள் விளையாடலோ அதியற்புதமான விளையாடல். தன்னையே, தான் வேறு தன் பக்தன் வேறல்ல என்று உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள். அரசரின் கட்டளைப்படி சிறையிலிருந்து அக்னி குண்டம் அமைத்து அதன் மேல் நிறுவிய சங்கிலித் தொடரில் 100 பலகைகள் கொண்ட ஊஞ்சலை அமைத்து அதில்  அமர்ந்து அபிராமி அந்தாதியை கள்ள வாரண பிள்ளையாரைக் காப்புக்கு அழைத்து  துவக்கினார் . ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒரு கயறு சிப்பாய்கள் அறுத்தனர்.  100வது பாடல் முடிந்ததும் நிலவு வராவிட்டால், நூறு கயரும் அறுக்கப் படும். பட்டரும் அடியில் எரியும் தீயில் விழுந்து உயிரை இழக்க வேண்டும்.  அந்தாதியாவது நூலின் ஒவ்வொரு பாடலிலும் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர், அடி ஆகிய இவற்றுள் யாதேனும் ஒன்று அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடி, இறுதிப் பாடலின் முடிவும் முதற்பாடலின் தொடக்கமும் ஒன்றாக இணையும்படி மண்டலத்து மாலை போலத் தொடுத்துப் பாடப்பெறும் ஒருவகைச் சிற்றியலக்கியமாகும். உதாரணமாக இந்த அபிராமி அந்தாதியில் 100-வது பாடலானது  ‘குழையைத் தழுவிய’ என்று ஆரம்பித்து ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’ என முடிகிறது. அபிராமி அந்தாதியின் முதல் பாடலோ ‘உதிக்கின்ற’ என ஆரம்பிக்கிறது.

முதல் பாடலைப் பார்ப்போம்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

உச்சித் திலகம் என்பது புருவ மத்தியைக் குறிக்கும். யோகநெறியில் புருவமத்தியை ‘ஆக்கினை’ என்று சொல்வது வழக்கு. ஐம்புலன்களை கட்டுக்குக் கொண்டுவரும் மையம் ‘ஆக்கினை’. சாதாரணமாக திலகம், குங்குமம் இட்டுக்கொள்ளும் இடம் இந்தப் புருவ மத்தியில்தான். ஒன்றைக் குறித்து யோசிக்கும்போதுகூட விரலால் புருவமத்தியைத் தொட்டுக் கொண்டு தான் யோசிக்கிறோம். இதனையே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார். ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்பது சூரியனின் செங்கதிர்களைக் குறிப்பது போல் தோன்றினாலும் – சூரியனின் கதிர்கள் எல்லாவுயிர்களையும் காப்பது போல், இறைவன் எல்லா உயிர்களிலும் உள்ளிருந்து இயக்குகிறான் என்பதை விளக்கவே ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்’ என்றார். அதாவது புருவமத்தியில் தோன்றி நம்மை இயக்குகிறாள் என்பது மறைபொருள். இதனை உணர்ந்தவர்கள் இறையை மாணிக்கமாக மதிக்கின்றனர்.

எனவே, எனக்கு விழுத்துணையாக அபிராமியைக் கொண்டேன் என்கிறார். அபிராமிபட்டர்.

அடுத்து ஒரு பாடல்:

கொள்ளேன் மனத்தில்நின் கோலம் அல்லா(து) அன்பர் கூட்டந்தன்னை

விள்ளேன் பரசம யம்விரும் பேன்வியன் (மூவுலகக்(கு)

உள்ளே அனைத்தினுக் கும்புறம்பே உள்ளத் தேவிளைந்த

கள்ளே களிக்கும் களியே அளியஎன் கண்மணியே

‘உன்கோலத்தைத் தவிர மனத்தில் வேறெதையும் நினைக்க மாட்டேன்; அத்தன்மையே எனக்கு அருளுவாய்’ என அபிராமியிடம் வேண்டுகிறார்.

உள்ளத்தில் எழும் சஞ்சலங்கள் சலனங்களுக்கெல்லாம் காரணம் வெளியில் பார்ப்பதால் ஏற்படும் மயக்கங்களே என்பதை ‘உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே’ என்ற வரிகள் விளக்குகின்றன. மாயை அகலவேண்டுமெனில் அவளையே தவம் செயயவேண்டுமென

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்

பென்னம் பெரிய முலையும் முத் தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங் கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னஞ் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே

 …….என மேற்கூறிய பாடலின் வாயிலாகக் கூறுபவர், அவள் அழகை –

அழகுக்(கு) ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின்

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க

இழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேல் உனக்(கு) என் குறையே

என்று வர்ணிக்கும் அதே சமயம், நான் அவள் நினைவிலேயே அவ்விதம் சொன்னேன். காக்கவேண்டிய அவளே கண்ணை மூடிக்கொண்டிருக்க, நான் உன்னிடம் என்ன சொல்ல வேண்டியிருக்கிறது என தன் அகத்தையே குறை கூறிக்கொள்பவர் பலவாறாக அவள் நாமங்களைப் பாடுவார். அவள் கண் திறந்தால் நடக்காதது எதுவும் இல்லை என்பதை 78-வது பாடலில்,

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு; வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு; அவ்வழி கிடக்க

பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?”*

என்று அவளது கடைக்கண் பெருமையைக் கூறி, 79-வது பாடலில் ‘விழிக்கே அருளுண்டு’ என்ற பாடலைத் தொடர்ந்து முடிக்க அன்னை அபிராமி தன் மகன் அபிராமிபட்டருக்காக நிலவை வானில் தவழவிட்டாள். அதன் பின்னர் அந்தாதியைத் தொடர்ந்து 100 பாடல்கள் பாடி முடித்தார் பட்டர். தன் தாடங்கத்தை நிலவாக்கி வானவீதியில் தவழவிட்டு, ‘பக்தனின் வாய்மொழி மெய்மொழியே’ என மெய்ப்பித்து பக்தனை அபிராமிபட்டராக்கினாள் அன்னை. அவளையே தவம் செய்த அபிராமிபட்டருக்கு அருள்மழை பொழிந்தாள்.

அந்தாதி முடிந்த பின் வரும் 101 பாடல்

ஆத்தாளை எங்க ளபிராம வல்லியை அண்டமெல்லாம்

பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவியடங்கக்

காத்தாளை அங்குச பாசங் குசமுங் கரும்பும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில்லையே

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.