சூல விரத மகிமை | TRIDENT WORSHIP | HAINDAVA THIRUVALAM | ஹைந்தவ திருவலம்

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம:

திரிசூலம்

திரிசூலம்

|| க எ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

“சூல விரத மகிமை”

(ஸ்கந்த புராணத்திலிருந்து)

“சகல விதமான சௌபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது, அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்துக்கொண்டு, அபிஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும். பிறகு மத்தியான வேளையில் திருநீறு, ருத்திராக்ஷ மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தானதர்மங்கள் செய்ய வேண்டும். அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, திருக்கோயிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கையும் செலுத்தி இறைவரை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒருமுறை மட்டும், உணவு உட்கொள்ள வேண்டும்.

இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று, தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள்.

மகாவிஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலியை நீங்கப் பெற்றார். மேலும் கொடிய அசுரனான, காலநேமியைச் சம்ஹாரம் செய்தார். ஜமதக்னி முனிவரின் புதல்வனும், மிக பலசாலியுமான பரசுராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும் இராவணனையும் மிஞ்சும் பராக்கிரமசாலியான கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றார். பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்றுவலி நீங்கப்பெற்றான். சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால், மரணத்தையே வென்று ஜயமடைந்தான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடைபிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பௌத்திரர்களைப் பெற்றெடுத்து, அளவற்ற போகங்களையும் அனுபவித்து இறுதியில் சிவலோகத்தை அடைந்தான். இவர்களைப் போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து, தாங்கள் விரும்பியவற்றை அடையப்பெற்று, இறுதியில் திருக்கயிலாயத்தையும் அடைந்தார்கள்.

ஆகையினால் மேலான இந்த சூல விரதத்தை எவர்கள் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தம் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களிலிருந்து நீங்கியும் மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்; தோஷ நிவர்த்திப் பெறுவார்கள் இன்னும் ஏனைய பாபங்களிலிருந்தும் விடுபட்டு, பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த இச்சூல விரதத்தின் மகிமையைப் பற்றி மகாபல பட்டரான வீரபத்திரர், சிறந்த கணத் தலைவரான பானுகம்பனுக்குக் கூறியருளினார் என்று எனக்கு வியாச முனிவர் அறிவித்திருக்கிறார். ஆகையால் தவசீலர்களே! சகல பாபங்களையும் வேரோடு அழிக்கவல்ல இந்த சூல விரதத்தின் சிறப்பைப் பற்றி விளக்கும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அவர்களுக்கு ம்ருத்யுவின் (மரணத்தின்) பயமே இராது.” – சூதமாமுனிவர்.

சுபம்

இந்த வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கும் ப்ரயோகம், செய்முறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான மந்திரம், யந்திரம், தந்திரத்தை தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- 92454 46956, whatsapp:- 96774 50429

This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.