The Most Honourable Supreme Chief Justice | தலைமை நீதிபதி சனி பகவான்

சனி மஹாத்மா

சனி மஹாத்மா

மனிதன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி…எவனாக இருந்தாலும் சரி…சனிபகவானின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எனவே தான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப் படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும். சனிபகவானை வணங்கும் போது நேரிடையாக அவரைப் பார்க்காமல், சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை சுற்றி வழிபட்டாலும், நாம் உண்மையான மற்றும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்காத வாழ்க்கை வாழ்ந்தால் எந்த தோஷத்திலிருந்தும் தப்பிக்கலாம். கிரகங்களுள் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்ற பெருமைக்கு உரியவர், சனிபகவான் மட்டுமே. தன்னை வழிபடுவோரின் வாட்டங்களைப் போக்கும் வல்லமை இவருக்கு உண்டு.

தசரத சனி ஸ்தோத்திரமும், புராணமும்

தசரத சக்கரவர்த்தி சப்த த்வீபங்களையும் அரசு பரிபாலனம் செய்து வந்தார். அவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிகாலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. குடி உயர்ந்தது. அக்குடி மக்களால் மன்னரின் கோன் உயர்ந்து, அவரது புகழ் எங்கும் கொடி கட்டிப் பறந்தது. ஈரேழு பதினான்கு லோகங்களும் தசரத சக்ரவர்த்தியின் பெருமையையும் புகழையும் பேசிய வண்ணமாகவே இருந்தன. இவ்வாறு இருந்து வரும் நாளில், ஒரு முறை தசரத மன்னனின் ஆட்சியின் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் சந்தர்ப்பம் ஒன்று உருவானது. அதனை முன்கூட்டியே உணர்ந்த ஜோதிடர் அரசனிடம், விஷயத்தை விளக்கினார்.

 அரசே! சனிபகவான் கிருத்திகா நக்ஷத்திரத்திலிருந்து, ரோகிணி நக்ஷத்திரத்தைப் பிளந்து கொண்டு வெளிப்படப்போகிறார், இதனை ஜோதிட சாஸ்திரத்தில், நாங்கள், ரோஹிணீ சகடபேதநம் என்று சொல்லுவோம். அவ்வாறு சனிக்கிரஹம் செல்வதால் பூமிக்கு என்ன கேடு வரப் போகிறது? தசரத சக்கரவர்த்தி வியப்பு மேலிடக் கேட்டார். ஜோதிடர், மன்னரைப் பார்த்து, மன்னவா! கிரஹங்களிலே சனியானவர் அசுரர்களையும், தேவர்களையும் நடுங்கச் செய்யும் படியான ஆற்றல் கொண்டவர். அவருடைய உக்ரத்தை உலகம் அறியும். அரசனும் அதனை அறியாதவர் அல்லர். இருப்பினும் நாங்கள் கூறுகின்றோம். இத்தகைய ரோஹிணீ சகட பேதநத்தால், நாட்டில் பன்னிரண்டு ஆண்டு காலத்திற்கு மழை பொழியாது. மழை இன்றி பயிர்கள் வாடும். பயிர் வாடுவதால் நாட்டிற்கு என்னென்ன இன்னல்கள் ஏற்படும் என்பதனை எவரும் அறிவர் என்று கூறினார்.

 நாட்டிற்கு வரப்போகும் துன்பத்தை, ஜோதிட நிபுணர்கள் மூலம், முன் கூட்டியே அறிந்த தசரத சக்கரவர்த்தி, சற்றும் தாமதியாமல் அவை கூட்டினான். அவை அறிய ஜோதிடர் சொன்னவற்றைப் பிரகடனப்படுத்தினான். அமைச்சர்கள், வசிஷ்ட முனிவரைக் கேட்டால் இதற்கு நல்லதொரு மார்க்கம் பிறக்கும் என்று கூறினார். தசரதர், வசிஷ்டமுனிவரை, அரண்மனைக்கு வர வழைத்தார். முறைப்படி மாமுனிவரை வரவேற்று உபசரித்தார். பின்னர் அரசன், முனிவர் பெருமானிடம், ஜோதிடர் மொழிந்தவற்றைச் சொன்னார். முனிபுங்கவரே! எனது ஆட்சி காலத்தில் பிரஜைகளுக்குத் துன்பம் ஏற்படலாமா? இதற்கு ஏதாகிலும் சனிப்ரீதி செய்வதற்கான உபாயம் உண்டா? என்று மனக் கலக்கத்துடன் வினவினார்.

 வசிஷ்ட முனிவர், மன்னர் முகம் நோக்கி, ரகுகுல நாயக! நீ சனிபகவானைத் தரிசித்து இதற்கு நல்லதொரு மார்க்கத்தைக் காண்பாயாக! என்றார். முனிவரின் மொழியை முழுமனத்துடன் ஏற்றுக் கொண்ட தசரத மாமன்னர், மகரிஷியே! தேவரீர் சித்தம்; எந்தன் பாக்கியம். அடியேன் இப்பொழுதே சென்று சனி பகவானைத் தரிசித்து, தியானித்து நமது நாட்டிற்கு வர இருக்கும் துன்பத்தைத் தடுக்க வழி கண்டு வருகிறேன் என்றார். வசிஷ்ட முனிவர், மங்களாநி பவந்து என்று மன்னனை அநுக்கிரஹித்தார். ஒரு நல்ல சுபமுகூர்த்த வேளையில், சனி பகவானைத் தரிசிக்க தசரதர் புறப்பட்டார்.

 பத்து திக்குகளுக்கும் தங்கு தடை இன்றிச் செல்லும், தனது பொன் வண்ணத் தேரைப் பூட்டினார் தசரதன்! திவ்யமான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ரதத்தில் அமர்ந்தார். காற்றினும் கடுக ரதத்தைச் செலுத்தினார். தசரதரின் பொற்தேர், ஆகாய மார்க்கமாக சூரியனுக்கு மேலே ஒன்றே கால் லக்ஷம் யோஜனை உயரத்தில் அமைந்துள்ள நட்சத்திர மண்டலத்தை அடைந்தது. ரோகிணி நட்சத்திரத்தின் முன்பாகச் சென்று நின்றார் தசரதர். அங்கே கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய பேரொளியைக் கண்டார் மன்னர்! ஒப்பற்ற – உயர்ந்த பலவகையான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கமயமான மேருபர்வதம் போன்ற உயர்ந்த திவ்யத் தேரில் அன்னப் பறவைகள் போன்ற வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தேரிலுள்ள நவமணித் தட்டில், வைர நவரத்ன பொற்கிரீடம் ஜொலி ஜொலிக்க – சூரியனைப் போல் காந்தியுடன் எழுந்தருளியிருந்த சனி பகவானைக் கண்டார் தசரத மன்னர்.

தசரதர் வில்லில் நாணேற்றி, சனிபகவான் மீது ஸம்ஹா ராஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய முற்பட்டார். தசரதரைப் பார்த்து சனீசுவர பகவான் குறுநகை புரிந்தார். தசரத மன்னா! தேவர்களும் அசுரர்களும் அஞ்சும்படியான உனது அதிபராக்கிரமத்தைக் கண்டு யாம் அக மகிழ்ந்தோம்! பிரஜைகளின் ÷க்ஷமத்திற்காக என்னை எதிர்த்து வந்த உன் பிழையைப் பொறுத்துக் கொள்வேன். உம்முடைய தவமும், வலிமையும் எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வேண்டும் வரம் தருவோம்! சனிபகவானின் பெருங்கருணையால், மன்னர் கோடி இன்பம் கொண்டார். நாணேற்றிய வில்லைக் கீழே போட்டார். கரங்கூப்பித் தொழுதார். ஆதவன்மைந்தா! அநேக கோடி நமஸ்காரம். எனது நாட்டில் உம்மால் மழைபொழியாமல் இருக்கக் கூடாது த்வாதச வர்ஷ க்ஷாமம் என்பது எப்பொழுதுமே எனது பிராஜைகளுக்கு ஏற்படக் கூடாது. பிரஜைகளின் க்ஷேமத்தைப் பெரிதாகக் கொண்டு வாழும் சக்ரவர்த்தியின் ராஜ தர்மத்தைக் கண்டு, சனி பகவான், மன்னர் மீது கருணையும், வாத்ஸல்யமும் கொண்டு, தசரத மன்ன! உமது விருப்பம் போல் யாம் வரமளித்தோம். நீரும் உமது பிரஜைகளும் க்ஷேமமுடன் வாழ்வீர் என்று அருள்வாக்கு அளித்தார். தசரதர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை! முடிபட, சனிபகவானை அடிபணிந்தார் தசரதமன்னர். சனிபகவானைத் தோத்திரம் செய்தார்.

தசரத மன்னரின் தோத்திரங்களால் சனிபகவான் மகிழ்ந்தார். தசரத மன்னா! நீர் துதிசெய்த இந்த ஸ்தோத்திரத்தைக் காலையிலும், மாலையிலும் துதிப்போர்க்கு, அவர்களைப் பற்றியுள்ள தோஷங்கள் விலகும். சகல சுபமங்களங்களும் பொங்கும். எனக்கு விருப்பமான சனிக்கிழமைகளில், வன்னி தளத்தால் எம்மை அர்ச்சித்து, ஆராதித்து, எள் அன்னம் நிவேதித்து, தானம் செய்வோர்க்கு நான் நன்மையைச் செய்வேன். இவ்வாறு சனிபகவான் திருவாய் மலர்ந்து அருளியது கேட்டு, மனம் மகிழ்ந்த தசரதமன்னர் சனிபகவானை பன்முறை வலம் வந்தார். சனிபகவானின் ஸ்தோத்திரத்தை ஜபித்துக் கொண்டே தமது நகரத்திற்குத் திரும்பினார். சனிபகவானுக்குப் ப்ரீதியான சனிக்கிழமையன்று, தங்கத்தினால் செய்யப்பட்ட சனிபகவானின் விக்ரஹத்திற்குப் பூஜைகள் செய்து, எள் அமுது நிவேதித்து, தோத்திரங்களைச் சொல்லி, அன்றைய தினம் பூரண உபவாஸம் இருந்து அவரை ஆராதித்தார் தசரதர்! சனிபகவானின் அருளால், தனக்கும் தனது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் வர இருந்த பேராபத்தைத் தடுத்தார் தசரதர். சனிபகவானின் கிருபாகடாக்ஷத்தால் எல்லோரும் இன்புற்றனர்.

தசரத சனி ஸ்தோத்ரம்

ஓம் அஸ்ய ஸ்ரீ சனைஸ்ச்ச்ர்ய ஸ்தோத்ரஸ்ய

தசரத ரிஷி: த்ருஷ்டுப்ச்சந்த: சனைஸ்ச்சர தேவத:

சனைஸ்ச்சர ப்ரீத்யர்த்தே ஜபே வினியொக:

தசரத உவாச்ச:

கோணோந்தகோ ரௌத்ரயமோதபப்ரு:
கிருஷ்ண சனி பிங்கலமந்தஸௌரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

ஸுராஸுரா: கிம் புருஷோரகேந்த்ரா
கந்தர்வவித்யா தர பன்னகாஸ்ச்ச
பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

நரா நரேந்திரா பசவோ மிருகேந்திரா
வன்யாஸ்ச்சயே கீடபதங்க பிருங்கா:
பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

தேசாஸ்ச்ச துர்காணி வனானி யத்ர
ஸேனானிவேசா: புரபத்தனானி
பீட்யந்தி சர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

திலைர்யவைர்மாஷகுடான்னதானைர்
லோஹேன நீலாம்பரதானதோ வா
ப்ரீணாதி மந்த்ரைர்நிஜவாசரே ச
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

பிரயாககூலே யமுனதடே ச
சரஸ்வதீ புண்ய ஜலே குஹாயாம்
யோ யோகிநாம் த்யான கதோபி சூக்ஷ்மம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

அன்யப்பிதேசாத்ஸ்வக்ருஹம் பிரவிஷ்டஸ்
ததீயவாரே ச நர: சுகீ ஸ்யாத்
கிருஹாத்கதோ யோ ந புன: பிரயாதி
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாயா

ஸ்ரஷ்டா ஸ்வயம் பூர்புவனத்ரயச்ய
திராதா ஹரீசோ ஹரதே பினாகி
ஏகஸ்த்ரிதா ருக்யஜு:ஸாமமூர்த்திஸ்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாய

சன்யஷ்டகம் ய: பிரயத: பிரபாதே
நித்யம் சுபுத்ரை: பசுபாந்தவைஸ்ச்ச
படேது ஸௌக்யம் புவிபோகயுக்த
பிராப்னோதி நிர்வாணபதம் ததந்தே
கோணஸ்த: பிங்களோ பப்ரு: கிருஷ்னோ ரௌத்ரோந்தகோ யம:

ஸௌரி: சனைஸ்ச்சரோ மந்த: பிப்பல்லாதேன ஸம்ஸ்துத:
ஏதானி தசநாமானி பிராதருத்தாய ய: படேத்
சனைஸ்ச்ச்ரகிருதா பீடா ந கதாசித்பவிஷ்யதீ

 இதி ஸ்ரீ பிரம்மாண்டபுராணே சனைஸ்ச்ச்ர ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||


This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.