சிவ ஆகமம் – நித்திய பூஜை

சிவ லிங்கம்

ஆவுடயார்

திருக்கோவில் நித்தியக் கிரியைகள்: ஆலயங்களில் நிகழ்வுறும் நித்தியக் கிரியைகள் நித்தியம், ஆகந்துக நித்தியம் என இரு வகைப்படும். நித்தியம் என்பது  தினம் தினம் செய்யும் உஷத் காலம் போன்ற பூஜைகள். ஆகந்துக நித்தியம் எனப்படுவது ஒரு குறிப்பிட்ட தினத்தில் வந்து அமையும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி (சதுர்த்தி, ஷஷ்டி, சிவாரத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம் போன்ற நாட்களில்) செய்யப்படும் விரிவான நித்திய பூஜை (அம்சுமானாகமம்) (கவனம்: அத்தகு விசேஷ நாட்களில், நித்திய பூஜைகளுக்குப் பிறகு சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தால், அவை  நைமித்திக பூஜைகளாகிவிடும்)

நேரக்குறிப்பு: கடிகை அல்லது நாழிகை என்பது தற்போது நாம் அனுசரிக்கும் நிமிஷங்களுள் இருபத்து நான்கு (24 நிமிடம்) கொண்ட கால அளவு. யாமம் அல்லது சந்தி என்பது ஏழரை நாழிகை (3 மணி நேரம்); 8 யாமம் என்பது ஒரு நாள் (ஒரு இரவும் பகலும் கொண்டது)

பூஜாக் காலங்கள்: திருச்செந்தூர் திருக்கோவிலில் பன்னிரு கால வழிபாடுகள் நடைபெறுவதாகக் கூறுவர். அதியலாவிடின், உஷத்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரக்ஷை, இரண்டாங்காலம் (இரவின் முதல் யாமம்), இரவு அர்த்த யாமம் ஆகிய ஆறு காலங்களிலாவது ஆலயபூஜை செய்வது சிறந்தது: அந்த அளவிற்கு வசதி இல்லாத திருக்கோவில்களில் மூன்று அல்லது இரண்டு கால பூஜைகள் மட்டும் நிகழ்த்துவிக்கப் பெறுகின்றன. இரண்டு காலங்கள் செய்வதனால், காலசந்தியும் சாயரக்ஷையும் செய்திடல் வேண்டும். சூர்யோதயத்துக்கு முன் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் உஷத்கால பூஜை செய்யவேண்டும். காலசந்தி பூஜை (ப்ராத: காலம்) சூர்யோதயம் முதல் 10 நாழிகைக்குள் நடைபெறவேண்டும். சாயரக்ஷை கால பூஜை (ப்ரதோஷ காலம்) சூர்யஸ்தமனத்திற்கு மூன்றேமுக்கால் நாழிகை முன்னதாகத் தொடங்கி, சூர்யாஸ்தமனம் ஆகும்போது நிறைவடையும். இரண்டாங்காலம் என்றழைக்கப்பெறும். இரவு முதல் யாம பூஜை அடுத்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் செய்யப்படல் வேண்டும். அர்த்த யாம பூஜை என்பது, இரண்டாங்காலத்துக்குப் பிறகு, திருக்கோவில் நடை அடைப்பதற்கு மூன்றேமுக்கால் நாழிகை முன்னதாகத் தொடங்கிச் செய்யப்பட்டு ஆலயம் மூடுவதுடன் நிறைவடையும்.

This entry was posted in Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.