பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறுபூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயான் திருநீறே

பூச இனியது நீறு – நெற்றியிலும் உடலெங்கும் பூசுவதற்கு இனியது திருநீறு

புண்ணியம் ஆவது நீறு – நல்வினைப்பயன்களைத் தருவ்து திருநீறு

பேச இனியது நீறு – பெருமைகளை எடுத்துப் பேச இனிமையாக இருப்பது திருநீறு

பெரும் தவத்தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு – பெரும் தவம் செய்யும் அடியவர்களுக்கெல்லாம் அவர் தம் ‘மற்றை நம் காமங்களைத்’ தீர்ப்பது திருநீறு

அந்தமதாவது நீறு – இறுதி நிலையாவது திருநீறு

தேசம் புகழ்வது நீறு – ஊர் உலகமெல்லாம் புகழ்வது திருநீறு

திருவாலவாயான் திருநீறே – மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

மிக எளிமையான பாடல்.

அதிகாலை எழுந்ததும் இறைவன் திருவடிகளைத் தொழுது நெற்றி மணக்கத் திருநீறு பூசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பூசி உணர்ந்தவர்களுக்குத் தெரியும் அதன் இனிமை. அந்த திருநீறை அணிந்து கொண்டு யார் முன்னால் சென்றாலும் அதனைப் பார்ப்பவர்களுக்கும் அதன் புனிதத்தால் நல்ல உணர்வுகள் தோன்றி நல்ல செயல்கள் செய்ய நல்ல தூண்டுதல் கிடைக்கிறது. நமக்கும் திருநீறு அணிந்ததால் உள்ளம் தூய்மை பெற்று நல்வினைகளில் ஈடுபாடு தோன்றுகிறது. அப்படி புண்ணியங்கள் ஆவது திருநீறு. இதன் பெருமைகளைப் பேசத் தொடங்கினால் கேட்பதற்கும் இனியதாக இருக்கிறது. பேசுவதற்கும் இனியதாக இருக்கிறது. திருநீறின் பெருமைகளே பெருமை. முற்பிறவித் தவத்தாலும் நம் முன்னோர் செய்த தவத்தாலும் நமக்குத் திருநீறு அணியும் எண்ணம் தோன்றி நம் ஆசைகளை அறுக்கிறது. ஐயன் வள்ளுவன் சொன்னதைப் போல் பற்றற்றானின் பற்றைப் பற்றி மற்ற பற்றுகளை விட அணி செய்கிறது திருநீறு. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று என்று இறைவனை வேண்டத் தூண்டுகிறது திருநீறு. ஆதி பகவன் முதற்றே உலகு என்று எல்லோருக்கும் தெரியும். அந்தமும் அவனே என்று சொல்லாமல் சொல்லி நிற்பது திருநீறு. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் பொய்யாமொழிப் புலவர். ஊர் உலகம் தேசமெல்லாம் போற்றிப் புகழும் படி நிற்பது திருநீறு. இவ்வளவு பெருமையும் உடையது திருவாலவாயாம் மதுரையம்பதி வாழும் மீனாட்சி சுந்தரேசனின் மடைப்பள்ளித் திருநீறே.

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.