அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறுஅருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

அருத்தம் அதாவது நீறு – நீங்காத செல்வம் ஆவது திருநீறு

அவலம் அறுப்பது நீறு – துயரங்களை நீக்குவது திருநீறு

வருத்தம் தணிப்பது நீறு – மன வருத்தங்களை எல்லாம் தணிப்பது திருநீறு

வானம் அளிப்பது நீறு – வானுலகத்தை தருவது திருநீறு

பொருத்தம் அதாவது நீறு – அணிபவர்களுக்கெல்லாம் பொருந்துவது திருநீறு

புண்ணியர் பூசும் வெண்ணீறு – புண்ணியம் செய்தவர்கள் அணியும் வெண்ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே – செல்வம் கொழிக்கும் மாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே.

நிலையில்லாச் செல்வங்களை வேண்டி நாம் அவனிடம் செல்லாமல் நிலைபேறான வைத்தமாநிதியான ஐயனையே வேண்டி செல்லும் படி நம்மைச் செய்வது திருநீறு. பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தருவதால் வேறு பொருட்செல்வமே தேவையில்லை; திருநீறே பொருள் என்னும் சொல்லுக்கே பொருளதாவது.

நிலையில்லாச் செல்வங்களைத் தேடி அலையும் போதும் துயரங்கள் வருகின்றன. அவை கிடைத்தாலோ அவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்ற துயரம். அந்தச் செல்வங்கள் தொலைந்தாலோ பெருந்துயரம். இப்படிப்பட்டத் துயரங்களை யெல்லாம் தீர்த்து பெருஞ்செல்வத்தையே பெற்றுத் தந்து அவலம் அறுப்பது திருநீறு.

நிலைபேறில்லாச் செல்வங்களால் வந்த மனவருத்தங்களும் வைத்தநிதி (வங்கிக்கணக்கு), பெண்டிர், மக்கள், குலம், கல்வி போன்றவற்றால் வந்த மனவருத்தங்களும் தணிப்பது திருநீறு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் பொய்யாமொழிக்கேற்ப வையத்துள் வாழ்வாங்கு வாழவைத்து வானத்தையும் அளிப்பது திருநீறு.

உயர்வு தாழ்வு இன்றி எந்த வித வேறுபாடும் இன்றி யார் அணிந்தாலும் பொருத்தமாய் இருப்பது திருநீறு.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப அவன் அருள் பெறும் புண்ணியம் செய்தவர்கள் அணிவது வெண்ணிறத் திருநீறு.

இப்படிப்பட்ட திருநீறு அணிந்து பெருஞ்செல்வத்தை அடைந்து திருமகள் அருள் நிறைந்த அடியவர்கள் வாழும் திருமாளிகைகள் சூழ்ந்த திருவாலவாய் அப்பனின் திருநீறே இப்பெருமைகளை உடையது.

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.