அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே

எயிலது அட்டது நீறு – திரிபுராசுரர்களின் முப்புரம் எனும் மூன்று கோட்டைகள் சிரித்தெரி கொளுத்தியது திருநீறு.

இருமைக்கும் உள்ளது நீறு – இம்மை மறுமை எனும் இருமைக்கும் உறுதுணையாக உண்மையாக உள்ளது திருநீறு.

பயிலப்படுவது நீறு – கல்வி கரையில கற்பவர் நாள் சில என்ற நிலையில் கல்வி கரையின்றி இருக்கும் போது எதனைக் கற்றால் எல்லாவற்றையும் கற்றதாகுமோ அப்படிப்பட்டது திருநீறு.

பாக்கியமாவது நீறு – இம்மைக்கும் மறுமைக்கும் நல்வினைப்பயனாவது திருநீறு.

துயிலைத் தடுப்பது நீறு – அறியாமையையும் அந்தகன் கைப் பாசத்தால் வரும் அருந்துயிலையும் தடுப்பது திருநீறு.

சுத்தமதாவது நீறு – அணிபவர்களையும் நினைப்பவர்களையும் பேசுபவர்களையும் சுத்தம் ஆக்கும் சுத்தங்களில் சுத்தம் அதாவது திருநீறு.

அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே – கூர்மையான ஒளிவீசும் திருசூலத்தை ஏந்திய திருவாலவாயான் திருநீறே!

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.