அகலிகைக் கதை சங்க இலக்கியத்தில்

நட்சத்திரம்* – அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!

“நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?”

“நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்”

“பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்க்கும் ஆசையில் பூனை இறங்கியது போல் வால்மீகி வடமொழியில் எழுதிய இந்த இராமாவதாரக் கதையைத் தமிழில் எழுத இறங்கினேன் என்று சொல்லி இராமாவதாரக் காவியம் எழுதினாரே கம்பர் அவர் இலக்கியத்தில் அகலிகைக் கதை வருவதைச் சொல்கிறீர்களா?”

“நீ சொன்னது போல் கம்பநாட்டாழ்வாரின் காவியத்தில் அகலிகைக் கதை வருகின்றது தான். உன் குறிப்பையும் புரிந்து கொண்டேன். அது வடமொழி இதிகாசத்தின் தழுவல் தானே; அதில் அகலிகைக் கதை வருவதில் வியப்பென்ன என்கிறாய். சரியா?”

“ஆமாம். கம்பராமாயணத்தில் அகலிகைக் கதை வருவதில் வியப்பில்லை. வடமொழியாளர்களின் கற்பனைக் கதையான இந்தக் கதை தொன்மையான கதை என்பதற்கு இந்தத் தரவு மட்டும் போதாது”

“ஹாஹாஹா. நான் கம்பரின் இராமாவதாரக் காவியத்தைப் பற்றியே குறிப்பிடவில்லை. நீயாக அதனைத் தான் நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அந்தத் தரவு போதாது என்று சொல்கிறாய். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று நீயும் ஒப்புக் கொள்ளும் படியான சங்க இலக்கியங்களிலேயே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

வடமொழி நூற்களை ஆய்ந்த அளவிற்குப் பழந்தமிழ் நூற்களை ஆய்வு செய்யாததால் நிறைய பேருக்கு இதெல்லாம் தெரிவதில்லை. வடமொழி நூற்களை மட்டுமே நோக்கிய பார்வையைக் கொஞ்சம் பழந்தமிழ் இலக்கியம் பயில்வதற்கும் திருப்பு. அப்படிச் செய்தால் இன்னும் பல செய்திகள் தெளிவாகும்”

சங்க இலக்கியத்திலேயே இருக்கிறதா? பொய் சொல்லாதீர்கள். புராணங்கள் சொல்வதெல்லாம் கற்பனைக் கதைகள். அந்தக் கற்பனைக் கதைகள் சங்க இலக்கியங்களில் இருக்கவே இருக்காது.”

“நண்பா. நான் சொல்லுவதை நம்ப இயலாவிட்டால் நீயே படித்துப் பார்க்கலாம் அல்லவா?”

“அதற்கெல்லாம் நேரமில்லை நண்பரே. அகலிகைக் கதை சங்க இலக்கியங்களில் வருகிறது என்பதற்கு ஒரே ஒரு தரவு தாருங்கள். பின்னர் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்”

“சரி தான். தமிழ் இலக்கியங்கள் என்று வந்துவிட்டாலே எல்லோரும் வாழைப்பழ சோம்பேறிகள் ஆகிவிடுகிறார்கள். சரி. நானே பழத்தை உரித்து உன் வாயில் ஊட்டுகிறேன்.

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மால்மருகன் திருக்கோவிலின் அருகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சொல்லி வரும் போது நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகைக் கதையைப் பேசுகின்றது. அங்கிருக்கும் குரங்குகளுக்கு தின்பண்டங்களைச் சிலர் தருகிறார்கள்; சிலர் யானைகளுக்குக் கரும்புகளைத் தருகிறார்கள்; சிலர் தெய்வீகமான பிரமவித்தையைப் பற்றி பேசுகிறார்கள்; சிலர் குழல் இசைக்கிறார்கள்; சிலர் யாழ் இசைக்கிறார்கள்; சிலர் வேள்வியின் பெருமைகளைச் சொல்கிறார்கள்; சிலர் முரசுகளை ஒலிக்கிறார்கள்; சிலர் முறைப்படி வானத்தில் வரும் விண்மீன்களையும் இருசுடர்களையும் கொண்டு வகுக்கப்பட்ட கலையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; இப்படி இருக்கும் போது காமனும் இரதியும் போன்ற இளையவர்கள் அசையாது அமர்ந்து இவற்றை எல்லாம் நோக்குகிறார்கள். அவர்கள் அப்படி அசையாது இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் – இந்திரன் பூனையாக இருக்கும் போது கவுதமன் சினம் கொள்ள அதனால் அகலிகை கல்லுருவாகி நின்றாளே – அது போல இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.”

“இந்த விளக்கம் எல்லாம் சரி தான். பாடலைச் சொல்லுங்கள். அந்தப் பாடல் வரிகள் இதனைத் தான் சொல்கிறதா இல்லை நீங்கள் உரை செய்யும் போது மாற்றிவிட்டீர்களா என்று அப்போது தான் அறியலாம்”

“என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா அன்றி பழந்தமிழர் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா தெரியவில்லை. பாடல் வரிகளைச் சொல்கிறேன். கேள்.

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கருமுகக்கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும்
கைவைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளிகுரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகியல் விளம்புவோரும்
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலி செய்வோரும்
என்றூழ் உற வரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவாரும்
இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும்
நேர்வரை விரியறை வியலிடத்திழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு…”

“எனக்குப் புரியக்கூடாது என்றே வேகவேகமாகச் சொல்லிவிட்டீர்கள். இதில் இந்திரன், அகலிகை என்றெல்லாம் இருப்பது நீங்கள் சொல்லும் போது கேட்டது. ஆனால் இது அகலிகைக் கதையைத் தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?”

“நன்றாய் கேட்டாய் நண்பா. அகலிகைக் கதையில் கவுதமன் திரும்பி வரும் போது இந்திரனின் நிலை என்ன என்று நினைவிருக்கிறதா?”

“கவுதமன் வருவதைக் கண்டவுடன் இந்திரன் பூனை வடிவம் எடுத்து நிற்பானே அதனைச் சொல்கிறீர்களா?”

“ஆமாம். அதனைத் தான் இங்கே இந்தப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இந்திரன் பூசை – இந்திரன் பூனையாக நின்றான்; இவள் அகலிகை – இந்தப் பெண் அகலிகை; இவன் சென்ற கவுதமன் – இவன் குளிக்கச் சென்ற கவுதமன்; அந்தக் கவுதமன் சினம் கொள்ள அகலிகை கல்லுரு கொண்டது போல் இவர்கள் நிலை. இப்படித் தெளிவாக அகலிகைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது”

“அதெல்லாம் சரி. இந்திரன் பூனையாக இருந்ததை இந்தப் பாடல் சொல்கிறதென்றே வைத்துக் கொள்வோம். அகலிகை கல்லானதைச் சொல்லும் இந்தப் பாடல் இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி சொல்கிறதா?”

“இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி இந்தப் பாடல் சொல்லவில்லை நண்பா. ஆனால் பரிபாடலில் இன்னொன்று சொல்கிறது. குன்றம்பதனார் இயற்றிய ஒன்பதாம் பாடல் அது. செவ்வேளின் மனைவியைப் பற்றி குறிப்பிடும் போது அவள் இந்திரன் மகள் என்பதைக் குறிக்க “ஐயிரு நூற்று மெய்ந்நயனத்தவன் மகள்” என்று சொல்கிறது. இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவன் என்ற குறிப்பு அகலிகைக் கதையில் இந்திரன் பெற்ற சாபத்தைக் குறிக்கிறது. சரியா?”

“சரி தான். இன்னும் என்ன என்னவோ பிரமவித்தை, வேள்விகளின் பெருமை, கோள் நிலைக் கலை என்றெல்லாம் சொன்னீர்களே. அவற்றைப் பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறதா?”

“சொல்லியிருக்கிறது நண்பா. நீயே ஒரு முறை இந்தப் பத்தாம் பாடலைப் படித்துப் பார். தெரியும்”

“கடைசியாக ஒன்று. முருகன் திருமாலின் மருகன் என்று சொன்ன கதையெல்லாம் இடைக்காலத்தில் தமிழ்க்கடவுளான முருகனைத் தங்களுக்குரியவன் ஆக்கிக் கொள்ள வைணவ வடக்கத்தியர் செய்த சூழ்ச்சி தானே. நீங்களும் பொருள் சொல்லும் போது மால் மருகன் என்று சொன்னீர்களே. வலிந்து நீங்களே சொன்னது தானே”

“அடடா. என்ன ஒரு அவநம்பிக்கையும் அரைகுறை ஆராய்ச்சியும்! இலக்கியங்களைப் படிக்காமலேயே மனத்திற்குத் தோன்றியபடி எல்லாம் போகிற போக்கில் இப்படி சொல்லிச் செல்கிறார்கள் சில பேர். அவர்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி என்றும் வேறு சிலர் போற்றுகிறார்கள். எல்லாம் சங்க இலக்கியங்களைப் பெரும்பான்மையோர் கற்காததால் வரும் விளைவுகள்.

நான் வலிந்து இதனைச் சொல்லவில்லை. நீயே இந்த பரிபாடலை நேரடியாகப் படித்துப் பார்த்துக் கொள். மிக மிகத் தெளிவாக பரங்குன்றத்து மால் மருகன் மாடம் என்று திருப்பரங்குன்றம் கோவிலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். முருகனை மால் மருகன் ஆக்கியது பிற்காலத்தவர் சூழ்ச்சி என்றால் இங்கே சொல்லப்படும் மால் மருகன் யாரோ? திருப்பரங்குன்றத்துக் கோவிலும் எவருடையதோ?

அது மட்டுமில்லை நண்பா. கச்சியப்பர் கந்த புராணம் எழுதும் காலம் வரை முருகனுக்கு வள்ளி என்ற மனைவி மட்டுமே உண்டு; இந்திரன் மகளான தேவசேனையை அவனுக்கு முதல் மனைவியாக்கியது ஆரியர் சூது என்று சொல்லுவோரும் உண்டு. அவர்கள் இந்தப் பரிபாடலை எல்லாம் படித்ததில்லை போலும். இந்த ஒன்பதாம் பாடலில் மிகத் தெளிவாக செவ்வேளின் மனைவி தேவசேனை என்றும் அவள் இந்திரனின் மகள் என்றும் சொல்லியிருக்கிறது. திருமுருகாற்றுப்படையில் தேவசேனையாம் தெய்வயானையின் பெயர் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை; ஆனால் அங்கும் திருப்பரங்குன்றத்தைப் பற்றி பேசும் போது ‘மறு இல் கற்பின் வாணுதல் கணவன்’ என்று ‘இரு சாராரும் முன் நின்று நடத்த நடந்த திருமணத்தினால் அமைந்த மனைவி’ என்று தேவசேனையின் பெயர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நேரடியாகச் சொல்லியிருந்தாலும் சரி; குறிப்பாகச் சொல்லியிருந்தாலும் சரி; நாங்கள் சொல்வதே சரி. தரவுகளைப் பார்க்கமாட்டோம் என்றிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

ஒன்றை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன். நல்லதென்று நாம் இன்று நினைப்பவை எல்லாம் எல்லாக் காலத்திலும் நல்லவையாகவே நினைக்கப்பட்டவை இல்லை; கெட்டதென்று நாம் இன்று நினைப்பவையும் அப்படியே.

அதே போல் நல்லவை என்று நாம் இன்று நினைப்பவை மட்டுமே நமக்குரிய்வை; நாம் கெட்டது என்று நினைப்பவை எல்லாம் அந்நியர்கள் கொண்டு வந்து நுழைத்தவை என்று நினைப்பதும் அறிவுடைமை ஆகாது. நல்லதும் கெட்டதும் எல்லா வகையினரிடமும் உண்டு. முடிந்தவரையில் விருப்பு வெறுப்பின்றி ஒன்றை நோக்கக் கற்றுக் கொள்வதே நல்லது.

http://koodal1.blogspot.com/2008/08/kumaran-star-post-sanga-ilakkiyam.html

This entry was posted in Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.